Advertisment

கிடா சண்டைக்காக நடிகர்களுக்கு கடுமையான பயிற்சி - அனுபவம் பகிரும் ஜாக்கி பட இயக்குநர்!

2

கிடா சண்டையை மையமிட்டு அறிமுக நடிகர்கள் நடித்த திரைப்படம் ஜாக்கி. இத்திரைப்படத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மெனக்கிடல்கள் பற்றி இயக்குநர் பிரகபல் நம்மிடையே தன்னுடைய அனுபவத்தை பகிர்கிறார்.

Advertisment

நான் இயக்குர் பிரகபல். மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட்  ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக மட்டி என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்ததற்கு அடுத்ததாக, அதைவிட சுவாரசியமான ஒரு கதையை தேடி இந்தியா முழுவதும் நிறைய பயணப்பட்டேன்.

Advertisment

அப்படி மதுரைக்கு செல்லும்போது நான் கிடா சண்டை பந்தையத்தை நேரில் பார்த்தேன். அந்த பந்தையத்தை பார்க்கும் போதே, அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கிடா சண்டைக்குள் ஒரு வாழ்வியலும், அது மட்டுமின்றி உணர்வு நிலையில் கிடாவிற்கும் அதன் கட்டாரிக்கும் ஒரு பிணைப்பு இருப்பதை கவனித்தேன்.

 அந்த பிணைப்பு தான் அந்த கிடா நன்றாக சண்டையிட ஊக்கமளிப்பதையும் கவனித்தேன். தமிழ் மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி போன ஒரு விளையாட்டு என்று கண்டறிந்தேன். இதுதான் நான் தேடி வந்த விஷயம் என உணர்ந்ததற்கு பிறகு அது சம்பந்தமான நிறைய தரவுகளை சேகரிக்க தொடங்கினேன்.அந்த தேடலில் தான் எனக்கு புரிய வந்தது நான் ஒரு பெரிய உலகிற்குள் வந்திருக்கிறேன் என்று. ஏனென்றால் இந்த மாதிரி சண்டை கிடாக்களை வளர்ப்பதற்காக அவர்களுடைய ஐ.டி. வேலைகளை கூட விட்டுவிட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிறைய இளைஞர்கள் சந்தித்தது எனக்குள் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது.

இது மட்டுமின்றி இன்னொரு காரணம், இந்த சண்டை கிடாக்கள் எல்லோருடைய குடும்பத்திலும் ஒரு நபராக மாறியிருந்ததை கண்டேன். மனிதர்களை போல, அந்த கிடா இறந்தால் கூட கடவுளாக வழிபடப்படும் வழக்கத்தையும் கண்டேன்.கிடாவை வளர்க்கும் கட்டாரி அதனுடன் பேசி, பழகி, நெடுநாள் பயணித்து அதை தயார்படுத்துகிறார். அது சண்டைக்கு செல்லும் முன் அதற்கு மாலை அணிவித்து, பூஜைகளை செய்து கொண்டாடி தயார்படுத்துகிறார். இப்படி கிடா சண்டை என்பது, அந்த மக்களின் உணர்வுகளோடு பின்னி பிணைந்துள்ளது என்று எனக்கு புரிய வந்தது.

உடனே நான் மதுரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, 2022 முதல் அங்கேயே தங்கி கதை எழுத ஆரம்பித்தேன். படத்தின் மூல கதையை எழுதி முடித்ததுமே, இந்த கதையை படமாக்க வேண்டும் என்றால், இதில் கெடா கட்டாரியாக நடிக்கப்போகும் நடிகருக்கும் கிடாவுக்கும் ஒரு நல்ல பிணைப்பு இருக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்துவிட்டது.

அப்படியான நல்ல பிணைப்பை உருவாக்க, கிடாவுடன் நேரம் ஒதுக்கி அதற்கு உணவளித்து, அதை குளிப்பாட்டி, அதற்கான தங்குமிடங்களை அமைத்து அதை நன்றாக பராமரிக்க வேண்டும். அப்படி உணர்வாய் ஒன்றிபோனால் தான் கெடாவுடன் ஒரு பிணைப்பை உருவாக்க முடியும் என்று அறிந்ததுமே, நான் முதலில் நான்கு நல்ல வலுவான கிடாக்களை தேடி வாங்கினேன். கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவும் ஆரம்பித்தேன்.

இந்த கதாபாத்திரங்களுக்கான தேர்வுகளில் நிறைய சிக்கல் இருந்தது. வரும் நடிகர்கள், இந்த கதாபாத்திரங்களுக்காக நிறைய நேரம் செலவழிக்க வேண்டும். அது மட்டுமின்றி இந்த கிடாக்களோட பயணப்படும் போதும், கிடா சண்டை கட்டாரி பயிற்சியின் போதும் நிறைய காயங்கள் ஏற்படவும், கைக் கால்கள் உடையவும், ஏன் மரணம் கூட நிகழ வாய்ப்பிருந்தது. நடந்த நிறைய உண்மை சம்பவங்களே இதற்கு சான்றாய் இருந்தது. இப்படியான அர்பணிப்புள்ள இரண்டு நடிகர்கள் தான் என்னுடைய முதல் படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும். இந்த கதையை பற்றி அவர்களிடம் சொன்னவுடன்

அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டார்கள். அதன் பின் அவர்கள் மதுரை வந்து, தங்கி, கிடாக்களுடனும், கிடா கட்டாரிகளுடனும் பழகி, அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டனர். மறுபக்கம், நானும் படத்திற்கான திரைக்கதையை எழுதிகொண்டிருந்தேன், நான் தமிழ்நாடு முழுக்க பயணப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் மதுரை மாநகருக்கு என்று தனி சிறப்புண்டு. அதற்கு காரணம், அதனுடைய தொன்மையான கலாச்சாரமும், பண்பாடும், வரலாற்று முக்கியத்துவங்களும் தான்.

கிடா சண்டை என்பது தென்னிந்தியாவின் கலாச்சார விளையாட்டாக இருந்தாலும், தமிழ்நாட்டில் முக்கியமாக மதுரையில் மிகவும் வேரூன்றிப்போய் இருந்தது. அதுபோல் மதுரை மக்களின் வாழ்வியல், அவர்களின் பேச்சுவழக்கு, அவர்களுடைய குணாதிசயங்கள், என எல்லாமே மற்ற நகரங்களில் இருந்து மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. இந்த நுணுக்கங்களை எல்லாம் எதார்த்தம் குறையாமல் படத்திற்குள் கொண்டுவர கதாநாயகனையும், வில்லனையும் மதுரை நகரத்துக்குள் அனைத்து இடங்களுக்குள்ளும் நடமாடவிட்டு, பல்வேறு ஆட்களுடன் பேசவிட்டு, கொஞ்சம், கொஞ்சமாக மதுரை மக்களோடு, மக்களாக மாற்றினேன். இப்படியாக ஒருபக்கம் கிடாவுடனும், மறுபக்கம் மதுரை மக்களுடனும் பழக வைத்து, அவர்களை மதுரை தன்மைக்குள் கொண்டுவர எனக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது.  அதற்கு பிறகுதான் கிடாக்களும், இவர்களின் குரலை கேட்டவுடனே ஓடி வருவது, தாவி குதிப்பது என சொல்வதை எல்லாம் கேட்கத் துவங்கியது.

உடனே அந்த ஊரில் நடந்த உண்மையான கிடா சண்டை பந்தையத்தில் கதாநாயகன் யுவன் கிருஷ்ணாவையும், அவருடைய கிடாவையும் போட்டியிட வைத்தேன். அந்த பந்தையத்தில் அவர்கள் இருவரும் முதல் பரிசான பதக்கத்தை வென்று வந்தார்கள். அந்த பந்தையத்தின் போது தான் கதாநாயகனுக்கும், அந்த கிடாவுக்குமான உறவையும், பிணைப்பையும் உணர்ந்தேன்.

 

அதேபோல் கதாநாயகன் யுவன் கிருஷ்ணா களத்தில் கிடாவை, கட்டாரியாக நின்று ஏவியதை பார்க்கும்போதே என்னுடைய கதையின் நாயகனாக தெரிந்தார். கிடா சண்டை என்று முடிவு ஆனதுமே நிறைய கிடா கட்டாரிகளோடு பேசி, அவர்களுடைய கதைகளை கேட்டு, அவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லாம் எடுத்து நிறைய உண்மைக்கு நெருக்கமாகவே, இந்த கதையை எழுதியுள்ளேன்.

மதுரை மக்கள் எல்லாருமே நன்றாக ஒத்துழைத்தனர். இரண்டரை வருடத்திற்கு மேலான அனுபத்துடன் தான் நான் படப்பிடிப்பிற்கு சென்றேன். நான் படப்பிடிப்பிற்கு சென்ற பிறகு தான், எனக்குள் நடந்திருந்த மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்தேன்.மதுரை மக்கள், கிடா சண்டை, மதுரையின் களம் என எல்லாவற்றுடனும் நான் ஒன்றிப்போயிருந்தேன். அதன் காரணமாக அந்த கலாசாரத்தை, மதுரை மக்களின் மற்றும் கிடா கட்டாரிகளின் உதவியோடு, மிகவும் நேர்த்தியோடும், உண்மைக்கு நெருக்கமாகவும் என்னால் படமாக்க முடிந்தது.

இந்த படத்தில் கிடா சண்டைகளை காட்சிப்படுத்தியுள்ளேன். அதை உண்மைக்கு நெருக்கமாக, மிகவும் நேர்த்தியாக படமாக்கியுள்ளேன். திரையில் அந்த காட்சிகளில் கதாநாயகனுக்கும், கிடாவுக்கும் இருக்கும் பிணைப்பை பார்க்கும்பொழுது உங்களுக்கு தெரியவரும். இந்த படத்தில், வில்லனுடைய கதாபாத்திரம் மிகவும் வலிமையானது. அதுவும் படத்தில், அவர் மூன்று வெவ்வேறு மிகவும் மூர்க்கத்தனமான கிடாக்களை கட்டுப்படுத்தி நடித்துள்ளார்.

அவருக்குமே, மூன்று வித்தியாசமான கிடாக்களுடன் பழக வேண்டும், ஒரு பிணைப்பை உருவாகக் வேண்டும். அதை நன்றாக சண்டையிட வைக்க வேண்டும் என்ற நிறைய சவால்களும், கிடாவினால் ஆபத்துகளும் இருந்தது. அவரும் அதற்காக நேரங்களை ஒதுக்கி, இரண்டரை வருடங்களுக்கு மேல் பயிற்சி பெற்றதால் தான் நன்றாக நடிக்க முடிந்தது. கிடா கட்டாரிகளுக்கு உடல் வலிமை மிகவும் அவசியம். களத்தில் கிடா எந்த அளவிற்கு வலிமையுடன் சண்டையிடுகிறதோ, அதைவிட அதிக வலிமையோடு கிடா கட்டாரியும் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, அந்த வலிமையான கிடாவை பிடித்து கட்டுபடுத்த தெரிந்திருக்க வேண்டும். இவர்களின் குரலின் ஓசைகளின் மூலம் கிடாவை கட்டுப்படுத்தி, இவர்களுக்கு ஏற்றார் போல் சண்டையிட வைக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய அவர்கள் மிகவும் வலிமையுடன் இருந்தே ஆக வேண்டும்.

அதற்காகவே, சாதாரண உடல் வாகுடன் இருந்த இரண்டு நடிகர்களும், இப்படத்திற்காக ஆரம்பம் முதலே நிறைய உடற்பயிற்சிகளை செய்து, கிடா கட்டாரிகளாக வேறொரு பரிணாமத்தை பெற்றிருக்கிறார்கள்.இந்த படத்தின் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மது சூதன் ராவ் நடித்துள்ளார். மற்றும் சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe