சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த 55 வயது மருத்துவர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (19/04/2020) உயிரிழந்தார்.
இவருக்கு ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிஸ் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கரோனா தாக்கத்தால் உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (19/04/2020) இறந்ததாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவரது உடல் வேலங்காடு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 20 பேர் மீது காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஊரடங்கை மீறுதல், தொற்று நோய் தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.
இந்நிலையில் நடிகர் விவேக் இதுகுறித்து வருத்தத்துடன் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கரோனா பாதிப்பால் இறந்த அந்த மருத்துவரை எங்கையும் அடக்கம் செய்ய விடமால் மக்கள், கரோனா அச்சம் காரணமாக தடுத்து நிறுத்தியுள்ளனர். மக்களுக்கு சில மருத்துவ உண்மைகள் புரியவில்லை என்று நினைக்கிறேன். WHOமற்றும் லாஜிக்கல் இந்தியா போன்ற இணையதளத்தில், இறந்தவர்கள் உடலில் கரோனா இருக்காது என்று சொல்கின்றனர். அந்த உடலை எரித்தாலும், புதைத்தாலும் யாருக்கும் அதனால் பாதிப்பு இல்லை. இவை அனைத்தையும் பல மருத்துவர்களிடம் அணுகியபின்தான் உங்களிடம் தெரிவிக்கிறேன். சாதாரண மக்களையே அப்படி நாம் இன்சல்ட் செய்யக்கூடாது, மருத்துவர்களெல்லாம் நடமாடும் தெய்வங்கள், அவர்களை நாம் மதிக்க வேண்டும். இருக்கும்போது அவரை கொண்டாட முடியவில்லை என்றாலும், இறந்தபின் அவரை அவமானப்படுத்தாமல் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.