Skip to main content

"உம்மன் சாண்டி நல்லவர் கிடையாது" - சர்ச்சையைக் கிளப்பிய விநாயகன்

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

actor vinayakan oommen chandy issue

 

கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (80) உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் கடந்த 18 ஆம் தேதி காலமானார். கேரள மாநில மூத்த காங்கிரஸ் தலைவரான உம்மன் சாண்டி இருமுறை கேரள மாநில முதலமைச்சராகப் பதவி வகித்தார். கேரளாவில் தொடர்ந்து 52 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இத்தனை ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர். இவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

 

இவரது உடல் அஞ்சலிக்கு எடுத்து செல்லப்பட்டபோது, இறுதி ஊர்வலத்தில் வழி நெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவை ஒட்டி கேரள தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. மேலும், கேரள அரசு சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உம்மன் சாண்டி குறித்து நடிகர் விநாயகன் தனது சமூக வலைத்தளத்தில் நேரலையில், "யார் இந்த உம்மன் சாண்டி. அவர் இறந்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டும். உம்மன் சாண்டி இறந்ததற்கு எதற்கு மூன்று நாள் விடுமுறை. அவர் நல்லவர் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், நான் சொல்லமாட்டேன்" என்றிருந்தார். 

 

விநாயகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதையடுத்து அந்த வீடியோவை அவர் நீக்கிவிட்டார். இதனிடையே கொச்சியிலுள்ள அவரது வீட்டில் கல்லால் தாக்குதல் நடந்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் விநாயகனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் 3 பிரிவுகளின் கீழ் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்