
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமா துறையும் முடங்கியுள்ளது. அதனால் அத்துறையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் டி.சிவா கூறுகையில், ''கரோனா ஊரடங்கு காரணமாக தவித்து வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இப்படி ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்கப் போகும், ஒரு நடவடிக்கை.

அவரைப் போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியைத் தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்துத் தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அப்படிச் செய்தால்தான், தற்போது வெளியாகக் காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த நிதிச்சிக்கலும் இல்லாமல் வெளியாகும். இப்படி ஒரு முன்னுதாரணமான செயலைச் செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவும் விஜய் ஆண்டனியை மனதாரப் பாராட்டுகிறேன். அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.