Skip to main content

இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிகளை இழந்த பிரபல நடிகர் 

Published on 22/03/2022 | Edited on 22/03/2022

 

actor vignesh loses crores Iridium scam

 

90களில் வெளியான 'கிழக்கு சீமையிலே', 'பசும்பொன்' உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள விக்னேஷ் இரிடியம் மோசடி கும்பலிடம் கோடிகளில் பணத்தை ஏமாந்துள்ளார். இதனையடுத்து இரிடியம் மோசடி கும்பலிடம் தான் இழந்த ரூ. 1.81 கோடியை மீட்டு தருமாறு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், "நான் 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன். இதை தவிர சொந்தமாகவும் தொழில் செய்கிறேன். எனது கடையில் வாடகைதாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் நட்பு ரீதியில் பழகினார். இதையடுத்து அவர் இரிடியம் என்ற பொருள் தனக்கு கிடைத்ததாகவும், அந்த பொருளை மத்திய அரசு உதவியுடன், ஆஸ்திரேலியாவில் உள்ள கம்பெனிக்கு விற்றதாகவும், அதன்மதிப்பு ரூ.3 லட்சம் கோடி என்றும் கூறினார். ராம் பிரபு இரிடியம் விற்கும் தொழிலை சட்டபூர்வமாக செய்வதாக கூறினார். அதில் முதலீடு செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறினார். மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இந்த தொழில் செய்வதாகவும் சொன்னார்கள். இதனால் ராம்பிரபு சொன்னதை உண்மை என்று நான் நம்பினேன். என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால், ரூ.500 கோடியாக உங்களுக்கு திருப்பி தருகிறேன் என்றும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். ராம்பிரபுவின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், நண்பர்களிடம் கடனாக பெற்றும் ரூ.1.81 கோடி கொடுத்தேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். 

 

இதையடுத்து அவர் குறித்து விசாரித்த போது என்னைப் போல நிறைய பேர்களிடம் அவர் இதுபோன்று பணம் வசூலித்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் போலீசார் ராம்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். என்னைப்போல 500 பேரிடம் ராம்பிரபு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். அவர் மீதும், அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிய காவலர்; நேரில் அழைத்துப் பாராட்டிய கமிஷனர்!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
The policeman who saved the incident victim The commissioner called and praised in person

சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் இரண்டாம் நிலைக் காவலரான விக்னேஷ் பாண்டி என்பவர் காசிமேடு காவல் வாகனத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20 ஆம் தேதி மாலை (20.02.2024) மாலை சுமார் 06.30 மணியளவில் காசிமேடு எஸ். என்.செட்டி ரோட்டில் காவல் வாகனத்தில் ரோந்து பணியில் இருந்துள்ளார்.

அச்சமயம் அவ்வழியே நடந்து சென்ற நபர் மீது ஒரு ஆட்டோ மோதியதில் அந்த நபர் நிலைதடுமாறி சாலையில் விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார். இதனைக் கண்ட காவலர் விக்னேஷ் பாண்டி சுயநினைவின்றி கீழே விழுந்தவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இதனால் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அதன் பின்னர் தன்னுடன் பணியில் இருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவருக்கு குடிநீர் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கிடந்தவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்றிய காவலர் விக்னேஷ் பாண்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விபத்தில் சிக்கியவருக்கு சி.பி.ஆர். மற்றும் முதலுதவி கொடுத்து ஒரு உயிரைக் காப்பாற்றிய இரண்டாம் நிலை காவலர் விக்னேஷ் பாண்டிக்கு ஒரு பெரிய சல்யூட். காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், காவலர் விக்னேஷ் பாண்டியின் வீரச் செயலைப் பாராட்டினார். விக்னேஷ் பாண்டி உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.