Advertisment

”என் கையைப் பிடிச்ச உடனே ரஜினி கேட்ட அந்தக் கேள்வி” - அண்ணாத்த நினைவுகள் பகிரும் வெள்ளப்பாண்டி

Vellai Pandi

Advertisment

திருமகன், சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான வெள்ளப்பாண்டி, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட வெள்ளப்பாண்டி, ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

திருமகன்தான் சினிமாவில் எனக்கு அறிமுகப்படம். அதன் பிறகு, சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர் என அடுத்தடுத்து படங்களில் நடித்தேன். அப்படியே சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். நான் வாய்ப்பு கேட்டு யாரிடமும் சென்று நின்றதில்லை. 56 வயதில்தான் சினிமாவுக்குள் வந்தேன். தேனியில் ஒரு கல்யாணத்திற்கு சென்றுவிட்டு வரும்போது, ஷூட்டிங்கை வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றேன். அப்போது பட்டுச்சட்டை, பட்டுவேஷ்டி உடுத்தியிருந்தேன். இயக்குநர் ரத்னகுமார் சார்தான் என்னை அழைத்து, ஒரு பண்ணையார் கேரக்டர் இருக்கு நடிக்கிறியா எனக் கேட்டார். நானும் சரி என்று நடித்தேன்.

எம்.ஜி.ஆர். எனக்கு குலதெய்வம் மாதிரி. அவருடைய படம் என்றால் அந்தக் காலத்தில் தவறாமல் ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துவிடுவேன். அப்படி இருந்த நான் இன்றைக்கு சினிமாவில் நடித்துள்ளேன் என்பதை நினைக்கும்போது சந்தோசமாக உள்ளது. சினிமா எனக்கு கொடுத்ததுதான் அதிகம்.

Advertisment

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தாய்மாமாவாக நடித்திருந்தேன். முதல் நாள், ரஜினி சார் எனக்கு கைகொடுத்த உடனே நீங்க விவசாயியா என்றார். எப்படி சார் கண்டுபிடிச்சீங்க என்று கேட்டதற்கு உங்க கையைத் தொட்டாலே தெரியுது என்றார். மிகவும் பெருமையாக இருந்தது. பின், என்னுடைய வயதைக் கேட்டார். 70 சார், உங்க வயதுதான் சார் என்றேன். அவர் கையைக் காண்பித்து, என் கை எப்படி இருக்கு, உங்க கை எப்படி இருக்குனு பாருங்க என்றார். நான் நிலத்துல வெயில்ல உழைக்கிறேன் சார், நீங்க ஏ.சி.யிலயே இருக்கீங்க என்று கூறினேன். ரஜினி சாரோட இணைந்து நடித்ததுல ரொம்ப சந்தோஷம்.

Actor Rajinikanth annathe
இதையும் படியுங்கள்
Subscribe