Skip to main content

தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறிய அஜித்... பிரைஸ் டேக்கை நினைவுகூர்ந்த விஜய்... நடிகர் டி.எம். கார்த்தி பேட்டி!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

T.M. Karthik

 

நாடகக் கலைஞரும் திரைப்பட நடிகருமான டி.எம். கார்த்தி தன்னுடைய கடந்தகால திரை அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் நக்கீரனிடம் பகிர்ந்துகொண்டார். அதில், ‘நண்பன்’ மற்றும் ‘பிகில்’ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தது குறித்தும், ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் நடித்தது குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

" ‘நண்பன்’ பட வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்த ஒரு வாய்ப்பு. என்னுடைய ஒரு நாடகத்தைப் பார்த்து ஆடிஷனுக்கு ஷங்கர் சார் கூப்பிட்டிருந்தார். ராகேஷ் கேரக்டருக்கான வசனம் பேசவைத்து என்னை ஆடிஷன் செய்தார்கள். ஷங்கர் சார் எதிர்பார்த்தது போலவே இருந்ததால் அந்தப் படத்தில் என்னைக் கமிட் செய்தார். ஷூட்டிங்கின்போது 'எவன்டா சட்னியைக் கண்டுபிடிச்சான்' என நான் கூறிய வசனத்தைக் கேட்டு ஷங்கர் சாரே சிரித்துவிட்டார். ‘நண்பன்’ செட்ல விஜய் சாரோட பழக வாய்ப்பு கிடைத்தது. விஜய் சார் செட்டில் மிக அமைதியாக இருப்பார். யார்கிட்டயும் அதிகமாக பேசமாட்டார். என் கால்ல சட்னி ஊத்திட்டு போற சீன் முடிந்ததும், நல்லா நடிச்சீங்க என்று என்னை வந்து பாராட்டினார். சத்யராஜ், ஜீவா என அந்த செட்டே ரொம்பவும் ஜாலியாக இருந்தது. 

 

‘நண்ப’னுக்கு பிறகு ‘பிகில்’ படத்துலயும் விஜய் சாரோட நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘பிகில்’ செட்டுல விஜய் சாரோட 25 நாட்களுக்கும் மேலாக நடித்தேன். படமாக வரும்போது எடிட்டிங்கில் நிறைய கட் ஆகிருச்சு. ‘பிகில்’ செட்டுல விஜய் சாரோட முதல்நாள் சந்திப்பே ரொம்பவும் நல்லாயிருந்தது. ஓர் ஓரத்தில் உட்கார்ந்திருந்த என்னை பின்னால் நின்று ஒருவர் தட்டினார். யாரென்று திரும்பிப் பார்த்தால் விஜய் சார் நின்றுகொண்டிருந்தார். ‘பாத்து ரொம்ப நாளாச்சு... எப்படி இருக்கீங்க... பிரைஸ் டேக் நல்லா பண்ணீங்க’ என்றார். அவர் இருக்கிற உயரத்திற்கு எங்களையெல்லாம் மதிக்கவே தேவையில்லை. ஆனால், பழசை நினைவில் வைத்து எங்களிடம் வந்து பேசுவதெல்லாம் பெரிய விஷயம். 

 

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் சாருடன் இணைந்து நடித்தேன். அஜித் சார் அப்படியே இதிலிருந்து வேறானவர். ரொம்ப பேசிக்கிட்டே இருப்பார். அவர் பக்கத்தில் உட்கார்ந்தால் போதி மரத்திற்கு அருகே உட்கார்ந்த மாதிரி இருக்கும். வாழ்க்கைத் தத்துவங்கள் பற்றி நிறைய பேசுவார். தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டுள்ளதால், வாழ்க்கை பற்றிய அவரது புரிதலே வேறாக இருக்கும். ஹைதராபாத்தில் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அதனால் பாதியிலே சென்னை திரும்ப வேண்டியதாகிவிட்டது. நான் சென்னை வந்த பிறகு அஜித் சார் ஃபோன் செய்து ஆறுதல் சொன்னார். அவர் ஒரு நடிகர் என்பதைவிட மிகப்பெரிய அறிவாளி. ஒருநாள் செட்டில் எல்லாருக்கும் பிரியாணி செய்துகொடுத்தார். நான் வெஜிடேரியன் என்பது தெரிந்தவுடன், உனக்கு வேறு ஏதாவது பண்ணித்தருகிறேன் என்றார். சொன்னது போலவே செட்டில் இருந்த வெஜிடேரியன்ஸ் அனைவருக்கும் தனியாக ஒன்று செய்துகொடுத்தார். இதுவெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். இதனால்தான் இவர்கள் இவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார்கள்".

 

 

சார்ந்த செய்திகள்