Skip to main content

ஐ.நா-வுக்கான இந்தியத் தூதருடன் நடிகர் சூர்யா சந்திப்பு

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

Actor Surya meets Indian Ambassador UN

 

இயக்குநர் பாலா நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 41' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

 

இதனிடையே தனது சொந்த காரணத்திற்காக மனைவியுடன்  நடிகர் சூர்யா அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சூர்யா குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

 

இந்நிலையில் நடிகர் சூர்யா  நியூயார்க்கில் ஐ. நா-வுக்கான இந்தியத் தூதர் டி. எஸ் திருமூர்த்தியை சந்தித்துள்ளார்.

 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த டி.எஸ் திருமூர்த்தி சூர்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்காள தேச பொதுத் தேர்தல்; ஐ.நா, அமெரிக்கா குற்றச்சாட்டு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
UN, US accused on Bangladesh General Election

வங்காள தேசத்தில், பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாகப் பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிறார். பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வந்தன. அதனால், வங்கதேச தேசியக் கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டுத் தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன. 

இதையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கழகம் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும், இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா அறிவித்தார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி கலீதா வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் கடந்த 7 ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. 350 தொகுதிகள் கொண்ட வங்காள தேசத்தில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே, 300 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறும். ஆனால், ஒரு வேட்பாளர் இறந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 41.8 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 

தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, எண்ணிக்கை முடிவுகள் நேற்று முன்தினம் (08-01-24) வெளியிடப்பட்டன. அதன்படி, தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 223 இடங்களில் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான ஜாதியா கட்சி 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது.

இதன் மூலம், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக வங்காள தேச நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க இருக்கிறார். கோபால் கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசீனா, 8வது முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இந்த குறைந்தபட்ச வாக்குப்பதிவே தங்களது தேர்தல் புறக்கணிப்புக்கு கிடைத்த வெற்றியாகும். எனவே, நியாயமற்ற முறையில் நடந்த இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், வங்காள தேசத்தில் நடந்த பொதுத் தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் பங்கு பெறாதது வருத்தமளிக்கிறது என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த தேர்தல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், “புதிய அரசு ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என 25,000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையால் தேர்தல் சிதைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து,  “வங்கதேசத்தில் நடந்த 12வது பொதுத் தேர்தல் நம்பகமான, நியாயமான முறையில் நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் போட்டியிடாததால், மக்களுக்கு வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை” என்று இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது. 

Next Story

“அசைவம் ஊட்டி விடுவாரு” - கண்ணீர் மல்க சூர்யா அஞ்சலி!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Surya tribute to Vijayakanth

நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராகத் தற்போது விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 

சூர்யா பேசியதாவது, “அண்ணனோட இந்த பிரிவு ரொம்ப துயரமானது. மனசு அவ்ளோ கஷ்டமாயிருக்கு. ஆரம்ப காலத்தில் நான் நடித்த படங்கள் எனக்கு பெரிய பாராட்டை பெற்றுத் தரவில்லை. பெரியண்ணா படம் அவரோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. ஒவ்வொரு நாளும் சகோதர அன்போடு இருப்பாரு, அப்பாவிற்காக வேண்டிக்கொண்டு நான் அசைவம் சாப்பிடுவதில்லை, அப்ப அவர் ஒரு வார்த்தையை உரிமையா சொல்லி ஏன் சைவம் சாப்பிடுறேன்னு திட்டி அவருடைய தட்டிலிருந்து எடுத்து சாப்ட வச்சாரு, நடிக்கிறவனுக்கு உடம்பில் சத்து வேண்டும்னு ஊட்டிவிடுவாரு”

“அவரோட நடிச்ச நாட்களில் பிரமிச்சு பார்த்தேன். அவரை இலகுவாக அனைவரும் அணுகலாம். கலைநிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்றபோது அவருடைய உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அவர் மாதிரி யாரும் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகம் பார்க்க முடியாதது என்பது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சிக்காரர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். விஜயகாந்த் இறந்தபோதே சூர்யா வீடியோ வெளியிட்டு தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு சூர்யா, கார்த்தி, சிவக்குமார் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.