Skip to main content

ரகுவரன் கேட்ட கேள்வியால் தூக்கத்தை தொலைத்த சூர்யா 

Published on 23/07/2022 | Edited on 23/07/2022

 

actor Suriya

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று திரைப்படம், நேற்று வெளியான 68ஆவது தேசிய விருதுகள் அறிவிப்பில் 5 விருதுகளை வென்றது. இந்தாண்டிற்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இன்று நடிகர் சூர்யாவின் 48ஆவது பிறந்த தினம் என்பதால் இந்த விருதை அவருக்கு கிடைத்த பொருத்தமான பிறந்தநாள் பரிசாகக் கருதி அவரது ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர். திரைத்துறையில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும் இந்த இடத்தை அடைய சூர்யா பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. சூர்யாவின் சினிமா வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்ற கணிப்பை பலமுறை உடைத்தெறிந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்திருக்கிறார். பீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்ற விமர்சனம் சூர்யாவிற்கு புதிதல்ல. கடைசியாக காப்பான் படத்தின்போதும் அந்தப் பேச்சு எழுந்தது.    

 

மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ’காப்பான்’ விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் எதிர்மறை விமர்சனங்களையே பெற்றது. அதற்கு முன்பாக வெளியான ’என்.ஜி.கே’, ’தானா சேர்ந்த கூட்டம்’, ’24’, ’மாசு என்கிற மாசிலாமணி’, ’அஞ்சான்’ உள்ளிட்ட படங்களும் சூர்யாவிற்கு பெரிதாகக் கைகொடுக்கவில்லை. இந்த வரிசையில் ஹரி இயக்கத்தில் வந்த சிங்கம்-3 மட்டுமே வெற்றியைப் பெற்றது. அரசியல் பேச்சுகளால் சூர்யாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. 

 

சரி, சூர்யாவின் ஆரம்பக்கட்டம் எப்படி இருந்தது. வாரிசு நடிகராக இருந்தாலும் சூர்யாவின் ஆரம்பக்கட்டம் மிகக் கடினமானதாகவே இருந்தது. முதல் படமான ‘நேருக்கு நேர்’ வெற்றி பெற்றாலும் அதற்குப் பிறகு நாயகனாக நடித்த பல படங்கள் தோல்வி அடைந்தன. தொடர்ந்து பல முயற்சிகளுக்கு பிறகு ‘நந்தா’ திரைப்படம்தான் ஒரு நாயகனாக அவரை நிலை நிறுத்தியது. கமர்ஷியல் வெற்றி என்றால் அது ‘காக்க காக்க’வில் இருந்துதான் - இதுதான் முறையான கமர்ஷியல் வெற்றி.

 

அதற்கு முன்புவரை நடிக்கத் தெரியாதவர், நடனமாடத் தெரியாதவர், உயரமாக இல்லை என்று பலவிதமாகக் கிண்டல் செய்யப்பட்டார். இவற்றையெல்லாம் தாண்டி கடினமாக உழைத்து முன்னணி ஹீரோவானார் சூர்யா. தமிழ் சினிமா வரலாற்றைக் கவனித்தவர்களுக்குத் தெரியும், அதில் வெற்றி நாயகர்களாக திகழ்ந்தவர்களில் பெரும்பாலானோருக்கு முதல் படமே வெற்றிப் படமாக அமைந்தது இல்லை. ஆரம்பக்கட்டம், சற்று கடுமையாகவும், கரடுமுரடாகவும் இருந்து அதைத் தாண்டி விடாமுயற்சியோடு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே பெரிய வெற்றிகள் கிடைக்கும்.

 

இப்படித் தோல்விகளைக் கடந்து முன்னணி நாயகனான சூர்யா நடிப்புடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தனது 'அகரம்' அறக்கட்டளை மூலமாக வாய்ப்பிழந்த ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி அளித்து கைத்தூக்கிவிடுகிறார். சமீப காலமாக பல்வேறு பொதுப் பிரச்சனைகள் குறித்து அவர் எழுதிய கட்டுரைகள் மேலோட்டமானவை அல்ல. இப்படிக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து போராடி வரும் சூர்யா இன்று தொட்டிருக்கும் உயரமும் அதை நோக்கிய அவரது லட்சிய ஓட்டமும் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாதவை. 

 

இந்த உறுதி சூர்யாவிற்கு எப்படி வந்தது? அதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒரு தடவ ஷூட்டிங் முடிச்சிட்டு ரயிலில் வந்து கொண்டிருந்தோம். அப்போது நான் அசதியில் தூங்கிவிட்டேன். திடீரென எழுப்பிய ரகுவரன் சார் ‘உனக்கு எப்படிடா தூக்கம் வருது. இன்னும் எதையும் சாதிக்காம’ என்று கேட்டார். அன்றிலிருந்து நான் சினிமாவில் வெற்றிபெறும்வரை சரியாகத் தூங்கியது கிடையாது- இப்படிப்பட்ட சூர்யா என்றும் வீழமாட்டார். வீழ்ந்தாலும் மீண்டும் எழ தவறமாட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்