Skip to main content

"கண்ணதாசனை ஆச்சரியப்படுத்திய கதை... எம்ஜிஆர் கொடுத்த 5000 ரூபாய்" - 'சாரைப்பாம்பு' சுப்புராஜ் சொன்ன அடேங்கப்பா சம்பவங்கள்!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

சாரைப்பாம்பு  சுப்பராஜை தெரியாதவர்கள் தமிழ் சினிமாவில் இருக்க முடியாது. 70களின் இறுதியில் சினிமா துறைக்கு வந்து 80களில் உதவி இயக்குநராக இருந்து, தற்போது நகைச்சுவை நடிகராக நடித்து வருபவர். இவருக்கும் வடிவேலுக்கும் இடையேயான தொடர்பு சொல்லித் தெரியவில்லை. பல படங்களில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். 43 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கும் அவர், தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார்.
 

h



இதுதொடர்பாக அவர் கூறும்போது, " எங்க அப்பாவுக்கு கண்ணதாசன் ஐயா நல்லா பழக்கமானவர். ஒருவிழாவில் பங்கேற்க எங்க ஊருக்கு வந்த அவரிடம் எங்க அப்பா எனக்குள் இருந்த சினிமா ஆர்வத்தை தெரிந்து கொண்டு அவரிடம் அழைத்து சென்றார். அப்ப எனக்கு 17 வயசு இருக்கும். என்ன நடக்குதுனே தெரியாத வயது. வாடானு எங்க அப்பா ஒருவரை பார்க்க அழைத்து சென்றார். நானும் போனேன். அங்கே காத்துகிட்டு இருந்த போது பட்டு சட்டை, பட்டு வேட்டியில் ஒருவர் வந்தார். நீயா தம்பி கதை வச்சிருக்கிறதுனு என்னை பார்த்து கேட்டார். எனக்கு யாருனு தெரியல. அப்பாவிடம் யாருப்பா என்று கேட்டேன். கண்ணதாசன் ஐயாடா என்று சொன்னார். உடனே அவர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, உங்கள பார்த்ததுக்கு அப்புறம் நான் சினிமாவில் சாதிச்சுடுவேன்னு நம்பிக்கை வந்திருச்சி ஐயானு அவரு கைய பிடிச்சிகிட்டு சொன்னோன். அவரு சரி கதை சொல்லுனு சொன்னார். நான் மூச்சி விடாம கதையை சொல்லி முடிச்சேன். என்னடா என்னைவிட கதை சூப்பரா சொல்றனு என்னை சென்னைக்கு அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது 1976ம் ஆண்டு. என்னை பாரதிராஜாவோடு சேர்த்துவிட்டார். சில காரணங்களால் இணைந்து பணி செய்ய முடியவில்லை. அப்புறம் சில இயக்குநர்களிடம் வேலை செய்தேன். ஆனால் இவன் கண்ணதாசன் ஆளுனு சொல்லி ஒதுக்க ஆரம்பிச்சாங்க. 

ஒருநாள் தெரு ஓரமாக நடந்து போயிட்டு இருந்தேன்.  ஒரு வீட்டை சுற்றி தெரு முழுவதும் நல்லா கூட்டமாக இருந்தது. அப்புறம்தான் அது முதலமைச்சர் எம்ஜிஆர் ஐயா வீடு அது தெரியவந்தது. வெள்ளை சட்டை போட்ட ஒருத்தவர், அந்த கூட்டத்தை ஒழுங்குப்படுத்திகிட்டு இருந்தார். திடீரென என்னை பார்த்த அவர், டேய் நீ மாணிக்கம் மகன் தானே நீ என்று கேட்டார். ஆமான்னனு சொல்லிகிட்டே அவர் அருகில் சென்றேன். உன் பேரு கூட சுப்புராஜ் தானே என்றார். அப்பாடா கடவுள் நமக்கு ஏதோ ஒரு வழிய காட்டுறாருனு நினைச்சிகிட்டே சந்தோஷமா ஆமான்னேன்னு சொன்னேன். சாப்டீயானு கேட்டார். மூனு நாளா சாப்பிடலனு சொன்னேன். எம்ஜிஆர் வீட்டுக்குள்ள என்னைய அழைச்சிட்டு போய் அவரு வயிறு நிறைய சாப்பாடு போட்டாரு. சாப்பிட்டு வீட்டுக்கு வெளியே நிக்கும்போது எம்ஜிஆர் ஐயா வெளியே வந்தாரு.

அந்த அண்ணன் அவரிடம் என் தம்பி வந்துருக்காருனு என்னை பத்தி சொன்னார். எம்ஜிஆர் ஐயா என்ன செய்யுறான்னு கேட்டார். உதவி இயக்குநரா இருக்கேன்னு சொன்னேன். உன்ன வேணும்னா பாரதிராஜா, பாக்கியராஜிடம் சேர்த்து விடட்டுமானு கேட்டார். ஐயா ஆள விடுங்க. ஏற்கனவே என்னைய கண்ணதாசன் ஆளுனு ஒதுக்குறாங்க, நீங்க முதல்வரா வேற இருக்கீங்க, அப்புறம் நீ சேர்த்துவிட்டீங்கனா என்னை ஒரே அடியா ஒதுக்குவாங்கனு சொன்னேன். ரொம்ப வெகுளியா இருப்ப போலனு சொல்லிகிட்டே எனக்கு பணம் கொடுக்க சொன்னார். பக்கத்தில் இருந்தவர் 1000 ரூபாய் கொடுத்தார். 1000 ரூபாயா 5000 ரூபாய் கொடுங்கனு சொல்லிட்டு கார்ல ஏறி அவரு போயிட்டார். 


சம்பவங்கள் தொடரும்...


 

சார்ந்த செய்திகள்