
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கரோனாவால் இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். அந்த வகையில் நடிகர் சூரி, தினசரி மக்களைப் பொழுதுபோக்காக வைத்திருக்க வீட்டில் தனது குழந்தைகளுடன் செய்யும் சேட்டைகளை வீடியோவாக பதிவிட்டு வந்தார். அதேபோல நிவாரணப் பொருட்களும் கொடுத்து உதவினார்.
இந்நிலையில், "வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம்" மற்றும் "மாற்றம் பவுண்டேஷன்" மூலம் இணைந்து சினிமாத்துறை நண்பர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், திருநங்கையர்களுக்கும், நடிகர் சூரி அவர்கள் முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் பள்ளி வளாகத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.அப்போது நடிகர் சூரி பேசுகையில்,
"எனது அக்கா, தங்கைகளான திருநங்கையர்களுக்கும், எனது அண்ணன் தம்பிகளான மாற்றுதிறனாளிகளுக்கும் எனது வணக்கங்கள்.
எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்குக் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது.
கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கரோனாதான். 'தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள்' என நமக்கு அடிக்கடி உணர்த்தியவர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தான். அவர்களுக்கு குடும்பம் இருந்தும் பொதுமக்களுக்காக அவர்கள் ஆற்றும் பணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
என் சினிமா குடும்பம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள், சினிமா துறையைச் சார்ந்த என் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் என்னால் ஆன உதவியை நான் செய்துள்ளேன், செய்து கொண்டும் இருக்கிறேன்.
சமீப காலமாக பல உதவிகளைச் செய்து வரும் "வேலம்மாள் கல்விக் குழுமம்" என்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களை மிகவும் மதிக்கிறேன். மேலும், "மாற்றம் பவுண்டேஷன்" திரு. சுஜித், திரு. உதய்சங்கர் அவர்களும் அவர்களால் ஆன பல உதவி திட்டங்களைச் செய்து வருகின்றனர்.
இன்று இவர்களோடு சேர்ந்து உங்கள் அனைவருக்கும் உதவ நான் அன்போடு கேட்டுக் கொண்டேன். சிறிதும் யோசிக்காமல் அவர்களும் உடனே சம்மதம் தெரிவித்தது மட்டுமன்றி உங்கள் தலைமையிலேயே இந்த உதவி திட்டங்கள் நடைபெறட்டும் என்று கூறினார்கள். அதன் மூலமாக இன்று உங்களுக்கு இந்த உதவியைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.

நமது உயிரைக் காக்க நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளைக் கடைப்பிடிப்போம். பயப்படாமல் இருங்கள், அதே நேரத்தில் மெத்தனமாக இருக்காதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள். மீண்டும் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.