Skip to main content

"இவர் வாலிக்கும் நாகேஷுக்கும் சோறுபோட்டவர்..." ஸ்ரீகாந்த் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

sivakumar

 

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று (12.10.2021) காலமானார். 1965ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், சிவாஜி கணேசன், சிவக்குமார், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய நடிகர்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில், 82 வயதான ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இதையடுத்து, அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

 

ad

 

அந்த வகையில், நடிகர் ஸ்ரீகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "எனது அருமை நண்பர் திரு. ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து,கே. பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர், ‘மேஜர் சந்திரகாந்த்’ என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர்தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும்போது அதே பெயரையே ஒப்புக்கொண்டு நடித்தார். நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார். வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்டபோது, தன் கையால் சமைத்து போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ , ‘ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார்.  என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை’, ‘சிட்டுக் குருவி’, ‘இப்படியும் ஒரு பெண்’, ‘அன்னக்கிளி’, ‘யாருக்கும் வெக்கமில்லை’, ‘நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். அன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த், லீலாவதி, மீரா கணவர் அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம், சினிமா என்று இரண்டு காஃபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்திவந்தேன். இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சால்வையைத் தூக்கியெறிந்த விவகாரம் - விளக்கமளித்த சிவகுமார்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
sivkumar about shawl throw iss

நடிகர் சிவகுமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் செய்யும் செயல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்த வகையில் காரைக்குடியில் சில தினங்களுக்கு முன்பு பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழாவில் சிவக்குமார் கலந்துகொண்டபோது, வயதான ஒருவர் அவருக்கு பொன்னாடை அணிய காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த சிவகுமார், அவர் கையில் வைத்திருந்த பொன்னாடையை பிடுங்கி தூக்கி எறிந்தார். இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வந்தது.   

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிவகுமார் மற்றும் அந்த பெரியவர் இருவரும் ஒன்றாக வீடியோ வாயிலாகப் பேசியுள்ளனர். சிவகுமார் பேசியதாவது, “அந்த பெரியவர் யாரோ எவரோ இல்லை. என் தம்பி. 50 ஆண்டுகால நண்பர். அவர் கல்யாணத்தையே நான்தான் பண்ணி வச்சேன். அது மட்டுமல்ல, மகள் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பேரன் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பொதுவா ஒரு நிகழ்ச்சிகளில் எனக்கு யாராவது சால்வை அணிய வந்தார்கள் என்றால், அதை திருப்பி அவங்களுக்கே போத்திருவேன். சால்வை அணியும் பழக்கம் எனக்கு கிடையாது. 

அன்னைக்கு 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சு 10 மணி ஆகும்போதுதான் நான் பேசுனேன். அப்போவே செம்ம டயர்ட் ஆகிருச்சு. கீழ கரீம் நின்னுக்கிட்டு இருந்தார். எனக்கு சால்வை போடுறது பிடிக்காது என்பதை தெரிஞ்சு அந்த மனுசன் கையில் சால்வையோடு நின்னுக்கிட்டு இருந்தார். பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழ போட்டது தப்புதான். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருத்தமும் படுகிறேன்” என்றார். சிவகுமார் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நடுவே அந்த பெரியவரும், சிவகுமாருக்கும் அவருக்கும் உண்டான நட்பை பற்றி பேசினார். மேலும் சிவகுமாருக்கு சால்வை போடுவது பிடிக்காது என்பது தெரிந்தும் சால்வை எடுத்து வந்தது தப்பு தான் எனக் கூறினார். 

Next Story

பொன்னாடையைப் பிடுங்கி வீசிய சிவக்குமார்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
sivakumar threw shawl in book release event

நடிகர் சிவகுமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் செய்யும் செயல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. 2018 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இளைஞர் ஒருவர் சிவகுமாரிடம் செல்ஃபி எடுக்க வந்த நிலையில், அந்த செல்ஃபோனை கோபமாகத் தட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பின்பு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட அவர், அந்த இளைஞருக்கு புது செல்ஃபோனும் வாங்கிக் கொடுத்தார். 

இதேபோல், 2019ல் சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் செல்ஃபி எடுக்க வந்த ஒரு இளைஞனின் செல்ஃபோனை தூக்கி எறிந்தார். இதுவும் பரவலாகப் பேசப்பட சிவகுமாரின் செயல் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் அரசியல்வாதியும் எழுத்தாளருமான பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். காரைக்குடியில் நடந்த இந்த விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த சிவகுமார், மக்களின் முக்கிய பிரச்சனையான தண்ணீருக்காகப் போராடி வழக்கை சந்தித்தவர் எனப் புகழாரம் சூட்டி, பழ. கருப்பையா காலில் விழுந்து வணங்கினார். 

இதனைத் தொடர்ந்து சிவகுமார் கீழே இறங்கி வந்து கொண்டிருக்கையில் வயதான ஒருவர் அவருக்கு பொன்னாடை அணிய காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த சிவகுமார், அவர் கையில் வைத்திருந்த பொன்னாடையை பிடுங்கி தூக்கி எறிந்துவிட்டார். இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது.