Skip to main content

"என் கடையில தான் அந்த இயக்குநர் டீ சாப்டுவாரு; எங்களை மிதிச்சுத்தான் இந்த நடிகர் மேல வந்தாரு” - சிங்கமுத்து

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

Actor Singamuthu Interview

 

வடிவேலுவுடன் பல படங்களில் கலக்கிய நடிகர் சிங்கமுத்துவுடன் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக  ஒரு சிறப்பு நேர்காணல்...

 

சிவகங்கையில் நாங்கள் ஒரு விவசாய குடும்பம். வருமானம் என்பது விவசாயம் மூலம் மட்டும் தான். வறுமையிலும் நான் பியுசி வரை படித்தேன். அதன் பிறகு கண்டக்டராக வேலை பார்த்தேன். அந்தக் காலகட்டத்தில் பல்வேறு வேலைகள் பார்த்துள்ளேன். அதன் பிறகு திருச்சியில் ஒரு அரிசி மண்டியில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு திருமணம் நடந்தது. மனைவியை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு சென்னைக்கு கிளம்பினேன். சென்னையில் சொந்தமாக அரிசி மண்டி வைத்தேன். நல்ல வியாபாரம் நடந்தது.

 

குடும்பத்தினர் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்தேன். 12 வருடங்கள் அரிசி மண்டி நடத்தினேன். காபி கடையும் நடத்தினேன். அரிசி மண்டி நடத்தியபோது திரைத்துறையினருடன் பழக்கம் ஏற்பட்டது. ஷங்கர் சார் கூட என்னுடைய கடையில் டீ சாப்பிட வருவார். நான் உதவி செய்த பலர் அதன் பிறகு எனக்கு உதவி செய்யவில்லை. வடிவேலுவுக்கும் எனக்கும் ஒரு மனத்தாங்கல் வந்தது. அவருடைய அறியாமையால் வந்தது அது. அவரால் என் மீது பழிச்சொல் வந்தது. 

 

வடிவேலு திமுகவுக்கு பிரச்சாரம் செய்தபோது ஜெயலலிதா என்னை அதிமுகவுக்கு அழைத்தார். அப்படித்தான் அரசியலுக்கு வந்தேன். ஜெயலலிதாவை மூன்று முறை சந்தித்திருக்கிறேன். ஜெயலலிதாவிடம் பேசச் சென்றபோது அனைவரும் என்னை பயமுறுத்தினர். ஆனால் ஜெயலலிதா என்னுடன் இயல்பாகப் பேசினார். ஜெயலலிதா பற்றி நான் எழுதிய கவிதைத் தொகுப்பை அவரிடம் கொடுத்தேன். நான் நன்றாகப் பேசுவதை அவர் அறிந்து கொண்டார். என்னுடைய கவிதைகளைப் பாராட்டினார். அவர் எனக்குக் கொடுத்த பணியை சரியாகச் செய்து அவரிடம் நல்ல பெயர் வாங்கினேன்.

 

இயக்குநர் விக்ரமன் ஒரு நல்ல டைரக்டர். அவர் ஏன் படங்கள் செய்வதில்லை என்று தெரியவில்லை. தாய்மார்களின் வரவேற்பு அவருக்கு அதிகம் இருந்தது. அவருடைய படங்களில் எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார். அனைவரையும் ஒன்றாக மதிக்கக் கூடியவர். உன்னை நினைத்து பட காமெடி மறக்கவே முடியாதது. தெய்வ வாக்கு என்கிற படத்தில் இணைந்து நடித்தபோது வடிவேலு என்னை அவருடைய ஆபிசுக்கு வரச் சொன்னார். அப்போதிருந்து இருவரும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தோம். அவருடைய உடல்வாகுக்கு அவருடைய பாடி லாங்குவேஜ் ஒத்துழைத்தது. 

 

விஜய் சார் நன்றாக காமெடி செய்யக்கூடியவர். அவருடன் நான் நிறைய படங்கள் நடித்துள்ளேன். வடிவேலுவுடன் நாங்கள் ஒரு டீமாக இணைந்து பல காமெடிகளை உருவாக்கியுள்ளோம். செட்டிலேயே பல காமெடிகள் உருவாகியுள்ளன. அப்படிப்பட்ட காமெடிகள் பெரும்பாலும் எங்களுக்கு நல்ல பெயரையே பெற்றுத் தந்துள்ளன. சில டைரக்டர்கள் கதையை மட்டும் எழுதுவார்கள். சிலர் காமெடி டிராக்கையும் சேர்த்து எழுதுவார்கள். எங்கள் டீமில் இருந்தவர்கள் வடிவேலு என்கிற கூட்டுக்குள் சென்று அடைபட்டோம். அவர் எங்களை ஏறி மிதித்து மேலே சென்றுவிட்டார். 

 

எங்களுடைய டீமில் இருந்தவர்களுக்கு என்னால் முடிந்த அளவு நான் சப்போர்ட் செய்கிறேன். அவர்கள் அனைவரையும் வைத்து இப்போது நாங்கள் ஒரு படம் செய்யப் போகிறோம். சந்தானம் பெரிய கெட்டிக்காரர். அவர் ஹீரோவாக நடிக்கச் சென்றதால் எங்களுக்கான வாய்ப்புகள் குறைந்தன. கண்டேன் காதலை படத்தில் எங்களுடைய காமெடி அதிகம் பேசப்பட்டது. சந்தானம் நன்றாக காமெடி ஸ்கிரிப்ட் செய்யக்கூடியவர். என்னுடைய மகன் சினிமாவில் ஆர்வம் இருந்தாலும் படிப்பிலும் மிகுந்த ஆர்வமுடையவர். இப்போது நடிப்பில் தீவிரமாக ஈடுபட முடிவெடுத்து கதைகள் கேட்டு வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்