“ஒரே ஃபோன் கால்தான்... என் பிரச்சனையை முடித்து வைத்தார்...” ; விஜயகாந்த் எனும் நடிகர்களின் பாதுகாவலர்

Actor Shyam Shared memory about Vijayakanth

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக ஷ்யாம் அவர்களைச் சந்தித்தோம். பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் முன்னாள்நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் பற்றி அவர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல் பின்வருமாறு...

விஜயகாந்த் பெரிய மாஸ் ஹீரோ;பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். நடிகர் சங்கத்து தலைவர். ஆனாலும் நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட எவ்வித கலை நிகழ்ச்சிகள் நடந்தாலும் எந்த விதமாகவும் அலட்டிக்கொள்ளாமல் ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் வந்தால் பவுன்சரைப்போல முன் வந்து நின்று பாதுகாத்து அரவணைத்து விழா மேடைகளுக்கு அழைத்துச் செல்வார். அதுக்கெல்லாம் ஒரு பெரிய மனசு வேண்டும். அதனால்தான் அவரைச் செல்லமாக கேப்டன் என்கிறோம். சின்ன நடிகர் பெரிய நடிகர் என்ற எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி அனைவரையும் சரிசமமாகப் பார்க்கக்கூடியவர்.

எனக்கும் ஒரு பிரச்சனை வந்தது. என்னை மிரட்டுவதற்கு என் வீட்டிற்கு ஆட்கள் எல்லாம் வந்தார்கள். தயாரிப்பாளர்களிடம் முழுப்பணத்தைக் கொடுத்தால் தான் நடித்துக் கொடுப்பேன் என்றும் டப்பிங்க்குஒத்துழைப்பு தரமாட்டேன் என்றெல்லாம் நான் சொன்னதாக குற்றச்சாட்டு வைத்து என்னை மிரட்டினார்கள். அப்போது விஜயகாந்த் அவர்களுக்கு ஃபோன் போட்டேன். “நீ ஃபோன் ஆஃப் பண்ணி வச்சுட்டு தூங்கு”ன்னு சொல்லிவிட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு கால் பண்ணி “இனிமேல் அது ஷ்யாம் பிரச்சனையில்லை, என்னோட பிரச்சனை” என்று சொல்லியிருந்தார்.

எங்கு பார்த்தாலும் மதுரை வட்டார வழக்கு மொழியில் “ஏய் தம்பி ஷ்யாம் எங்க மதுரைக்கார பய” என்று எல்லோரிடமும் சொல்வார். ஓடோடிப் போய் கட்டிப்பிடித்துக் கொள்வேன். அவரின் அன்பு என்பது என்றென்றும் அளவு கடந்தது.

shyam vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe