Advertisment

"நான் ரஜினிகாந்த்... நான் ஒரு நடிகர்..." ரஜினிகாந்தின் அறிமுகத்தைக் கேட்டு ஆச்சர்யமடைந்த பத்திரிகையாளர்!

Senthilkumaran

Advertisment

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் ‘சினிமா டைரீஸ்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

நடிகர்கள் என்றால் அழகாக இருக்க வேண்டும்; வெள்ளையாக இருக்க வேண்டும் என்பது ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதியாக இருந்தது. அழகான முகத்தோற்றம் கொண்டவர்கள் மட்டுமே கதாநாயகனாக முடியும் என்பதை உடைத்தவர் நடிகர் ரஜினிகாந்த். நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு வந்து, ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து, தனக்கென தனி பாணியை உருவாக்கி, தமிழ் சினிமாவிற்குள் அதுவரை நிலவிய நிலைமையை மாற்றிய சாதனைக்குச் சொந்தக்காரர்.

எனக்கு சிறு வயதாக இருக்கும்போது பெரியப்பா மகனுடன் இணைந்து ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்திற்குச் சென்றேன். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பரோட்டாவும் சால்னாவும் சாப்பிட்டோம். அதைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில், அந்தப் படத்தில் நடித்த நாயகனின் முக பாவனைகள் தோற்றம் எனக்கு கண் முன்னே வந்துகொண்டே இருந்தது. இதுவரை பார்த்த கதாநாயகன்களிடமிருந்து அவர் வேறுபட்டு இருந்தார். அந்தப் படம் ரிலீசாகி சில வருடங்கள் கழித்துதான் எங்கள் ஊருக்கே அப்படம் வந்தது. அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி சில வருடங்களுக்குப் பிறகுதான் எங்களுக்கு அறிமுகமாகிறார். பொதுவாக இளைஞர்களுக்கு நடிகர்கள் மீதுதான் ஈர்ப்பு ஏற்படும். ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும்போது கதாநாயகிகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். பெரும்பாலும் வில்லன் நடிகர் மீதெல்லாம் பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்படாது. வில்லன் நடிகராக நடிப்பவர்கள் மக்களிடம் அதிகம் திட்டு வாங்குபவர்களாக இருப்பார்கள். நம்பியார் வாங்காத திட்டுகளே கிடையாது. ஒரு வில்லன் நடிகர் மீது முதன்முதலில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது என்றால் அது ‘மூன்று முடிச்சு’ ரஜினிகாந்த் மீதுதான்.

Advertisment

பள்ளி காலங்களில் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகனாக இருந்தேன். 12ஆம் வகுப்பு படிக்கும்போது எனக்கு வேதியியல் பரிட்சை நடந்துகொண்டிருந்தது. அன்றைய தினத்திற்குப் பிறகு சனி, ஞாயிறு என இரு நாட்கள் விடுமுறை. வெள்ளிக்கிழமைதோறும் சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் வெளியாகும். அந்த இதழை ரஜினிதான் தயாரிப்பார். அன்று வேதியியல் பரிட்சை முடித்துவிட்டு அந்த இதழை வாங்குவதற்காக வேகமாக ஓடினேன்.அந்த இதழ் தீர்ந்துவிடக் கூடாது என்ற பரபரப்பில் ஓடிய நான், எதிரே வந்த பஸ்ஸைக் கவனிக்கவில்லை. கொஞ்சம் மெதுவான வேகத்தில் வந்த பஸ், என் மீது லேசாக மோதி நின்றது. நல்லவேளையாக நான் கீழே விழவில்லை. பஸ் கொஞ்சம் வேகமாக வந்து என் மீது மோதியிருந்தால் நான் கீழே விழுந்து என் மீது பஸ் ஏறியிருக்கக்கூட வாய்ப்புள்ளது. பஸ் ட்ரைவர் என்னைத் திட்டுவதைக்கூட கண்டுகொள்ளாமல் ரோட்டைக் கடந்து சென்று புத்தகக் கடையில் அந்தப் புத்தகத்தை வாங்கினேன். எட்டு வயதில் முதல்முறையாக ரஜினி படம் பார்த்தேன். நான் மேலே கூறிய சம்பவம் நடந்தது 17 வயதில். இதற்கு இடைப்பட்ட 9 ஆண்டுகாலத்தில் தீவிரமான ரஜினி ரசிகராக மாறியிருந்தேன்.

பின்பு, படித்து முடித்துவிட்டு பத்திரிகையாளராக சென்னைக்கு வந்தேன். ரஜினியின் ரசிகனாக இருந்த நான், பத்திரிகையாளராக அவரைச் சந்தித்த முதல் அனுபவம் மறக்க முடியாதது. அந்த சமயத்தில், ‘அண்ணாமலை’ படம் வெளியாகி அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா தரப்பின் எதிர்ப்புகளையும் அழுத்தங்களையும் ரஜினி எதிர்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ‘பாண்டியன்’ என்ற படத்தில் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார். நான் அவரைப் பேட்டி எடுக்க படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். காரில் வந்திறங்கிய ரஜினிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு என் பெயரையும் நான் பணியாற்றும் பத்திரிகை நிறுவனத்தின் பெயரையும் கூறி அறிமுகம் செய்துகொண்டேன். உடனேரஜினிகாந்த், தன்னுடைய பெயர் ரஜினி என்றும் தான் ஒரு நடிகர் என்றும் கூறி அவரை அறிமுகம் செய்துகொண்டார். “சார்... உங்களைத் தெரியாம இருக்குமா” என்று நான் கூற, “நோ மிஸ்டர் செந்தில்குமரன்... உங்களை நீங்க அறிமுகம் செய்தீங்களா... நான் என்னை அறிமுகம் செய்கிறேன்” என்றார். ரஜினிகாந்தின் இந்தச் செயலைக் கண்டு எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம். பின், அவரிடம் பேட்டி எடுக்க வேண்டும் எனக் கூறுகையில், “இப்ப பேட்டி வேண்டாமே... நான் என்ன பேசுனாலும் அரசியலாகிவிடுகிறது” என்றார். “நீங்கள் பேச வேண்டாம் சார்... படப்பிடிப்பு தளத்தில் உங்களைக் கவனித்து நானே எழுதிக்கொள்கிறேன்” என்றேன். அவரும் சரி எனக் கூறிவிட்டார். மறுநாள் சைதாப்பேட்டை அருகே நடைபெற்ற படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று, அங்கு ரஜினியின் அசைவுகள், ரசிகர்களின் ஆரவாரம் இவற்றையெல்லாம் தொகுத்து ஒரு கட்டுரையாக எழுதினேன். பின்பு, அது பத்திரிகையிலும் வெளிவந்தது. அந்தச் சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சியானதாகவும் மறக்க முடியாததாகவும் அமைந்தது. திரையுலகத்தில் ரஜினிகாந்தின் நாற்காலி இன்னும் அப்படியே உள்ளது. அதில் அவர்தான் அமர்ந்துள்ளார். அவருக்குப் பிறகு வந்த சிலர் அந்த நாற்காலியை நோக்கி வந்துகொண்டிருந்தாலும் அவர்கள் அந்த நாற்காலியைப் பிடிக்கும்வரை அவர்தான் அந்த நாற்காலியில் இருப்பார்.

Actor Senthilkumaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe