Skip to main content

"இதை முன்பே சொல்லிருக்க வேண்டியதுதானே...." எம்.எஸ்.வியின் பேச்சைக் கேட்டு மிரண்டுபோன உதவி இயக்குநர்!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் சினிமா டைரீஸ் என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பல தலைமுறைகளைக் கடந்து வந்த மாபெரும் இசையமைப்பாளர். தன்னுடைய வாழ்க்கையை இசைக்காகவே அர்ப்பணித்தவர். 'சிந்து நதியின் மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே...' என்ற பாரதியார் பாடலை 'கை கொடுத்த தெய்வம்' என்ற படத்தில் எம்.எஸ்.வி பயன்படுத்தியிருப்பார். அந்தப் பாடல் உருவாக்கத்தின்போது ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது. அந்தப்பாடலில் 'சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து...' என ஒரு வரி இடம்பெற்றிருக்கும். 'பாட்டிசைத்து' என்பது பாடும்போது 'பாட்டி செத்து' என்பதுபோல இருப்பதாக எம்.எஸ்.வி நினைத்தார். அதனால் அதை மாற்றவேண்டும் என முடிவெடுத்து, இயக்குநரை அழைத்து இந்த பாட்டிசைத்து என்ற வரி வேண்டாம். அதற்குப் பதிலாக வேறு வரி வைத்துக்கொள்வோம். பாடலை எழுதிய கவிஞரை அழைத்து வாருங்கள் எனக் கூறியுள்ளார். அதைக் கேட்ட இயக்குநருக்கு அதிர்ச்சி. பின்பு, பாரதியார் இறந்துவிட்டார் என எம்.எஸ்.வியிடம் எடுத்துக் கூறியுள்ளனர். அதைக் கேட்டு என்ன இறந்துவிட்டாரா என ஆச்சரியத்துடன் கேட்டாராம். இசை மட்டும்தான் எம்.எஸ்.விக்கு உலகம். இசையைத்தாண்டி வெளியுலகம் இந்த அளவிற்குத்தான் அவருக்குப் பரிட்சயமாக இருந்தது. தமிழ் சினிமாவில் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலம் என்றால் அது எம்.எஸ்.வியின் காலம்தான். பாட்டிற்குத்தான் இசை என்பதை உணர்ந்து கண்ணதாசனும் அவரும் இணைந்து படைத்த பாடல்கள் ஏராளம்.

 

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது உலகத்தமிழ் மாநாட்டிற்காக 'தமிழ் இலக்கியச்சோலை என்று ஒரு படம் எடுத்தோம். ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் உருவான அந்தப்படத்தில் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன். ஐந்து அரசர்களின் சிறப்புகளைச் சொல்லும் படமாக அப்படம் உருவானது. அந்தப்படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைத்தார். அப்படத்தில் நந்தி வர்மன் பற்றி கவிஞர் புலமைப்பித்தன் ஒரு பாடல் எழுதியிருந்தார். அந்தப்பாடலுக்கு இசையமைக்கும் பணி நடைபெற்றபோது நான் எம்.எஸ்.வி அவர்களுடன் உடனிருந்தேன். அதில், நந்தி வர்மன் நாடு தொண்டை நாடு... நாள்தோறும் நீ தமிழ்த்தொண்டை நாடு... காஞ்சியைத் தலைநகர் கொண்ட நாடு... கல்வியின் எல்லையைக் கண்ட நாடு என வரிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிகளுக்கு எம்.எஸ்.வி மெட்டமைக்க, அதை அருகிலிருந்து பயம் கலந்த பிரமிப்போடு நான் பார்த்துக்கொண்டு இருந்தேன்.

 

கல்வியின் எல்லையைக் கண்ட நாடு என்பதை கல்வி எல்லையைக் கண்ட நாடு என எம்.எஸ்.வி மெட்டமைத்தார். எனக்கு அதை அவரிடம் சொல்வதற்குச் சற்று தயக்கமாக இருந்தது. நான் தயக்கத்துடன் அவர் முகத்தை அடிக்கடி பார்ப்பதைக் கண்டு மெட்டமைப்பதை நிறுத்திவிட்டார். உடனே என்னை அழைத்து ஏதாவது பேசணும்னா பேசுங்க... பேசமா பார்த்துக்கொண்டே இருந்தா என்ன அர்த்தம் என்றார். நான் உடனே அந்தத் தவறை கூறியதும் பகவானே இதை முன்னரே சொல்ல வேண்டியதுதானே... ஏன் தயங்குனீங்க என்றார். இல்லையா நீங்க பெரிய இசையமைப்பாளர்... நான் சாதாரண உதவி இயக்குநர்... அதான் எப்படி சொல்றதுனு... என இழுத்தேன். என் தோளில் கைபோட்டு என்னை அப்படியே வெளியே அழைத்துச் சென்றார். நான் பெரிய இசையமைப்பாளராக இருக்கலாம்... நீங்க உதவி இயக்குநராக இருக்கலாம். ஆனால், நான் தவறாகப் பாடும்போது படவா விஸ்வநாத... கல்வியின் எல்லையை கல்வி எல்லைனு பாடிக்கிட்டு இருக்க எனச் சொல்லியிருக்க வேண்டாமா என்றார். அதைக் கேட்டு எனக்கு மிரட்சியாக இருந்தது. அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கக்கூடிய ஒருவர் உதவி இயக்குநருக்கு மரியாதை அளிப்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் தந்தது. பின்பு, ஸ்டூடியோவிற்குள் சென்று அதைச் சரி செய்துவிட்டுச் சரியாக இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.

 

அடுத்த சில வருடங்களிலேயே சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணிக்குச் சேர்ந்தேன். தமிழ் சினிமாவில் இசை எப்படி மாற்றம் கண்டிருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து நூற்றாண்டு திரையிசை என்று ஒரு நிகழ்ச்சி எடுக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆரம்பக்காலங்களில் பாடல்கள் எப்படி இருந்தன; எந்த இசையமைப்பாளர் புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார்; தெலுங்கு, சமஸ்கிருதத்தில் இருந்த பாடல் வரிகளைத் தமிழுக்குக் கொண்டுவந்தது யார்; அது மக்கள் தமிழுக்கு எப்போது மாற்றம் கண்டது; அதில் இலக்கியத்தமிழை சேர்த்தது யார் என விரிவான தகவல்கள் உள்ளடங்கிய நிகழ்ச்சியாக அந்த நிகழ்ச்சியை உருவாக்கினோம். நிகழ்ச்சியின் முடிவில் கண்ணதாசனை அந்த நூற்றாண்டின் சிறந்த கவிஞராக அறிவித்தோம். அதேபோல சிறந்த இசையமைப்பாளராக எம்.எஸ்.வி, இளையராஜா, கே.வி.மகாதேவன் என மூவரையும் தேர்வு செய்தோம். 

 

அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இரண்டு நாட்கள் கழித்து எம்.எஸ்.வி அவர்களை எங்கள் அலுவலகத்தில் பார்த்தேன். பல வருடங்களுக்கு முன்பு அவருடன் பணியாற்றினோம். தற்போது நம்மை நினைவில் வைத்திருப்பாரா? அவருடன் பேசலாமா என யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் வேறொரு வேலை வந்த காரணத்தால் நான் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டேன். சிறிது நேரம் கழித்து அலுவலக வரவேற்பறையில் இருந்து, எம்.எஸ்.வி அவர்கள் என்னைப் பார்க்க வந்திருப்பதாக எனக்கு ஃபோன் வந்தது. அவரை வெளியில் பார்க்கும்போது வேறேதோ காரணத்திற்காக வந்திருக்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால், என்னைப் பார்க்க அவர் வந்திருக்கிறார் என்றதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. நான் எழுந்து வரவேற்பறைக்குச் சென்றேன். அங்கு, கையில் ஒரு பூங்கொத்துடன் அவர் அமர்ந்திருந்தார். உடனே என்னிடம் வந்து, என்னையும் ஒரு பொருட்டாக மதித்து சிறந்த இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுத்தற்கு நன்றி எனக் கூறி, அந்தப் பூங்கொத்தை என்னிடம் கொடுத்தார். பெரிய இசைமேதையாக இருந்தாலும் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து தேர்ந்தெடுத்ததற்கு நன்றி எனக் கூறுவது எவ்வளவு பெரிய தன்னடக்கம் என்று யோசித்துப்பாருங்கள். அவர் நினைத்தால் யாரிடமாவது சொல்லிவிட்டிருக்கலாம். ஆனால், நேரடியாக வந்து நன்றி தெரிவித்தது அவரது மிக உயர்ந்த குணத்தைக் காட்டுகிறது.


 

சார்ந்த செய்திகள்