Skip to main content

தன்னடக்கத்துடன் இளையராஜா கூறியதைக் கேட்டு சிலிர்த்துப்போன இளம் பாடலாசிரியர்!

Published on 10/06/2021 | Edited on 10/06/2021

 

Actor Senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-டியூப் சேனலில் சினிமா டைரீஸ் என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், இசைஞானி இளையராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

சில கலைஞர்கள் உலகத்திற்கானவர்கள். இந்த உலகமே பார்த்து ரசிக்கக்கூடிய அளவிற்கு திறமையும் தகுதியும் அவர்களிடம் இருக்கும். அதில் சிலர், துரதிர்ஷ்டவசமாக உலக பரப்பளவில் குறைவான எண்ணிக்கையில் பேசக்கூடிய மொழியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகிறது. அவர்களுள் ஒருவராக, தமிழ் சினிமா, இந்திய சினிமா... ஏன், உலக சினிமாவே இனி பெறமுடியாத ஒரு கலைஞனாக தன்னுடைய இசைப்பயணத்தை நடத்திக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவைக் கூறலாம். உலகம் முழுவதும் பல இசையமைப்பாளர்கள் இருக்கலாம். ஆனால், இளையராஜாவிற்கென்று பல அற்புதமான சிறப்புகள் உள்ளன. 

 

எந்தவோர் இசைக்கருவியும் இல்லாமல் ஒரு மனிதன் எப்படி முழுக்கமுழுக்க தன்னுடைய சிந்தனையில் இசையை உருவாக்கி, அதை இசைக்குறிப்புகளாக எழுதி தன்னுடைய இசைக்குழுவினரிடம் கொடுத்து நினைத்த இசையை உருவாக்கமுடியும் என வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் பலர் இளையராஜாவைக் கண்டு வியக்கின்றனர்.ரஜினி நடிப்பில் வெளியான ப்ரியா என்ற படத்தில்' டார்லிங் டார்லிங்...' என ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். சிக்ஸ்டிராக் ஸ்டீரியோபோனிக் என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அப்பாடலுக்கு இசையமைத்திருப்பார் இளையராஜா. அந்தத் தொழில்நுட்பம் அப்போதுதான் தமிழ் சினிமாவிற்கு வருகிறது. அந்தப்பாடல் பராக் பராக் சொல்வது மாதிரியான இசையுடன் தொடங்கும். சிக்ஸ்டிராக் ஸ்டீரியோபோனிக் தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவிற்கு வரவேற்பதுபோல அந்த இசை இருக்கும். இதை அன்றைய காலத்து மக்கள் எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு காலத்தில் மக்கள் இதைக்கண்டு வியப்பார்கள் என்று நினைத்துதான் இளையராஜா இதைச் செய்திருக்கக்கூடும். 

 

ilayaraja

 

ஒரு படத்திற்காக இசையமைத்தோம்; நான்கு பாடல்கள் உருவாக்கினோம்; அது படத்தின் கதைக்கு ஒத்திசைவாக இருந்தது; திரையில் தோன்றியபோது மக்களிடம் பாராட்டு பெற்றுவிட்டது என்று இல்லாமல் இது மாதிரியான பல நுட்பமான விஷயங்களைப் பாடலில் வெளிப்படுத்தியிருக்கிறார் இளையராஜா. அவரின் பாடல்கள்தான் இன்றைக்கு பழைய படங்கள் பலவற்றை நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய பல சிறப்புகளுக்குரிய மாபெரும் இசைக்கலைஞரான இளையராஜாவுடன் எனக்கு சில அனுபவங்கள் இருக்கின்றன. 

 

இயக்குநர் ஆர்.பி.உதயகுமார் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியபோது, அவர் பாடல்கள் வரிகளை எழுதுகையில் நானும் கூட இருப்பேன். அவ்வப்போது சில வரிகளைக் கூறுவேன். அவருக்குப் பிடித்திருந்தால் எடுத்துக்கொள்வார். பின்பு, அவருடன் பாடல் ஒலிப்பதிவு கூடத்திற்குச் செல்லும்போது இளையராஜா வேலை செய்வதை அருகில் இருந்து பார்த்துள்ளேன். பல பாடல்களுக்கு இளையராஜாவே முதல் வரியைக் கொடுத்துவிடுவார். அதை வைத்து அடுத்தடுத்த வரிகளைக் கவிஞர்கள் எழுதுவார்கள். கவிஞர்கள் எழுதி முடித்த பிறகு, அந்தப்பாடல்களை நான்தான் பிரதி எடுத்துக்கொடுப்பேன். அதைப் பாடகர்கள் பாடுவதற்குப் பயன்படுத்திக்கொள்வார்கள். ஒரு கட்டத்தில், இளையராஜா இசையில் அஜந்தா என்ற படத்தில் பாடல் எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படத்தில் ஒரு முழுநீள கதாபாத்திரத்திலும் நான் நடித்திருந்தேன். 

 

ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி தேசிய விருது வென்ற பா.விஜய் அந்தப்படத்தில்தான் முதல்முதலாக இளையராஜாவுடன் இணைகிறார். மிகக்குறுகிய காலத்திலேயே இளையராஜாவின் இசையில் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. வழக்கம்போல முதல் வரியை இளையராஜா கொடுத்துவிட்டார். 'யார்க்கு யாரென்று எழுதி வைத்தாயோ பிரம்ம தேவனே...' என அவர் கொடுத்த முதல் வரியைத் தொடர்ந்து, 'எனக்கு இவளென்று எழுதி வைத்த என் காதல் அறிஞனே...' என அடுத்த வரியை எழுதியிருந்தேன். நான்கைந்து பல்லவி, சரணம் எழுதினேன். பின் நான் எழுதியலிருந்து தேவையான வரிகளை இளையராஜா எடுத்துக்கொண்டார். அந்தப்படத்தில் வாலி, முத்துலிங்கம் என ஒன்பது பாடலாசிரியர்கள் பணியாற்றினார்கள். நான் எழுதியிருந்த 'நிலா தோற்கும் ராத்திரி உலா போகும் தீபம் நீ... பலா தோட்டம் வாசம் நீ விழா காணும் கோவில் நீ...' என்ற வரியைப்படித்துவிட்டு பிரம்மாதமான கவிதையாக இருக்கிறது எனப் பாராட்டினார். மேலும், கதைப்படி நாயகன் சிட்டியில் வசிக்கும் டாக்டர் என்பதால் இந்த வரிகள் பொருத்தமாக இருக்காது எனக் கூறினார். அதோ என்று கேளடி இதோ என்று செய்கிறேன் என ஒரு வரி எழுதியிருந்தேன். இதில், அதோ என்று கேளடியை ஏதோ ஒன்று கேளடி என மாற்றிக்கொள்வோமா என்று என்னிடம் கேட்டார். இது மாதிரியான சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து அழகான ஒரு பாடலை உருவாக்கினார். அதைக் கேட்ட பிறகு இளையராஜா இசைஞானி மட்டுமல்ல மாபெரும் கவிஞரும்கூட என்பது எனக்குப் புரிந்தது. 

 

பிற கவிஞர்கள் எழுதிய பாடலை அதுவரை பிரதியெடுத்த நான், அந்தப்பாடலை எழுதிமுடித்த பிறகு என்னுடைய பாடலை நானே பிரதி எடுத்துக்கொண்டிருந்தேன். அந்தத் தருணமே மிக நெகிழ்ச்சியாக இருந்தது. அதை முடித்துவிட்டு அந்தப் பிரதியில் இசை இசைஞானி இளையராஜா, பாடல் செந்தில்குமரன் எனக் குறிப்பிட்டு அவரிடம் கொடுத்தேன். கொடுக்கும்போது ஒரு சால்வை போர்த்த முயன்றேன். ஒன்றாக வேலை பார்க்கும் நமக்குள் எதற்கு இது என்று கூறி கையில் வாங்கிக்கொண்டார். பின் அந்தப் பிரதியில் இசைஞானி என்று நான் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து, இசைஞானி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. உங்கள் பெயரைச் செந்தில்குமரன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே, அதுபோல இளையராஜா என்று எழுதினால் மட்டும் போதும் என்றார். மாபெரும் ஒரு கலைஞனின் வாயில் இருந்து வெளிப்பட்ட இந்த வார்தையைக் கேட்டு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. இளையராஜாவைப் பாராட்ட இசைஞானி என்பதைவிட உயர்ந்த வார்த்தை ஏதாவது இருக்குமா என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர் இசைஞானி என்பதையே  பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

மொழியையும் வார்த்தைகளையும் இசையையும் எவ்வளவு நுட்பமாக அவர் இணைக்கிறார் என்பதற்கு திருவாசகம் உதாரணம். இளையராஜாவிற்குள் மிகப்பெரிய கவிஞர் இருக்கிறார். எனக்கு வெண்பா எழுதக் கற்றுக்கொடுத்ததே இளையராஜாதான் என்று ஒருமுறை வாலி குறிப்பிட்டார். எந்தச் சூழலாக இருந்தாலும் அதற்காக கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார் என்று கூறுவார்கள். அதுபோல ஒரு மனிதன் எந்த மனநிலையில் இருந்தாலும் எந்தச் சூழலில் இருந்தாலும் அவனுக்கு ஆறுதல் தரும் வகையில் இளையராஜா ஒரு மெட்டாவது போட்டிருப்பார். 

 

 

சார்ந்த செய்திகள்