Advertisment

லட்சக்கணக்கில் பணம் இருந்த அறையில் உதவி இயக்குநரை நம்பி விட்டுச் சென்றது ஏன்? இயக்குநர் கே. பாக்யராஜ் கூறிய காரணம்!

Senthilkumaran

Advertisment

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் ‘சினிமா டைரீஸ்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் கே. பாக்யராஜ் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

கடந்த தலைமுறையினருக்குத் திரைக்கதை என்றால் கே. பாக்யராஜின் பெயர்தான் நினைவுக்கு வரும். பாக்யராஜிற்கு முந்தைய காலகட்டத்தில் சிறந்த திரைக்கதைகொண்ட படங்கள் பல இருந்தாலும், அந்தத் திரைக்கதை ஆசிரியர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இல்லை. காரணம், நடிகர்கள், கவிஞர்கள், பாடகர்கள் மட்டுமே கொண்டாடப்பட்ட காலம் அது. பாரதிராஜா வருகைக்குப் பின்னர்தான் இயக்குநரை வெகுஜன ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அதற்கு முன்பு, பத்திரிகைகள், சினிமா விமர்சகர்கள் இயக்குநரைக் குறிப்பிட்டுப் பேசினாலும், ரசிகர்களால் இயக்குநர் கொண்டாடப்பட ஆரம்பித்தது பாரதிராஜா வருகைக்குப் பின்னரே. அதேபோல திரைக்கதை என்ற விஷயம் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியதற்கு முக்கிய காரணம், திரைக்கதை மன்னன் பாக்யராஜ்தான். ஒருமுறை தூர்தர்ஷன் பேட்டியில் பிரபல இந்தி இயக்குநர் மிர்னால் சென், திரைக்கதைப் பற்றி பேசும்போது பாக்யராஜ் பெயரைக் குறிப்பிட்டு வெகுவாகப் பாராட்டினார். வடக்கத்திய சினிமாக்காரர்களுக்குத் தமிழ் சினிமா பற்றி இரண்டாம் தர பார்வை இருந்த காலகட்டத்தில்கூட, அவர்கள் பாக்யராஜின் திரைக்கதையைக் கண்டு வியந்தனர்.

இயக்குநர் மணிவண்ணன் தன்னுடைய சிறு வயதில் பாரதிராஜாவின் படங்களைப் பார்த்துவிட்டு ‘கிணற்றுத்தவளை’ என்ற பெயரில் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதி அனுப்புவாராம். அதைப் படித்துவிட்டு பாரதிராஜா மணிவண்ணனை உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார். நானும் இந்த முறையைப் பின்பற்றி பாக்யராஜிடம் உதவி இயக்குநராக சேரலாம் என நினைத்தேன். நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது ‘முந்தானை முடிச்சு’ படம் வெளியானது. அந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி என்னை வெகுவாக ஈர்த்தது. படத்தின் டைட்டில் தொடங்கி கடைசி காட்சிவரை படத்தில் என்னவெல்லாம் ரசிக்கும்படி இருந்தது என விரிவாக எழுதி அவருக்கு அனுப்பினேன். தொடர்ந்து அதுபோல ஒவ்வொரு படத்திற்கும் அனுப்ப ஆரம்பித்தேன்.

Advertisment

இதற்கு சில ஆண்டுகள் முன்பு, தேவி வார இதழில் கேட்கப்படும் கேள்விக்கு நாம் பதில் அனுப்ப வேண்டும். அதில் சிறந்த பதிலை பாக்யராஜ் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். அதை, பத்திரிகையில் நம் பெயருடன் பிரசுரிப்பார்கள். ‘தாவணிக் கனவுகள்’ படம் ஓடாததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு நான் ஒரு பதில் எழுதி அனுப்பியிருந்தேன். நான் எழுதிய பதில் அவருக்குப் பிடித்திருந்ததால் என்னுடைய பதிலை சிறந்த பதிலாகத் தேர்ந்தெடுத்தார். மேலும், தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு கடிதமும் எழுதினார். அக்கடிதத்தில்,என்னுடைய முகவரியைக் குறிப்பிட்டு இங்கு வசிக்கும் நீங்கள் இன்னும் சினிமா துறைக்கு வந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுடைய பார்வை சிறப்பாக இருக்கிறது" எனப் பாராட்டியிருந்தார். இது கொடுத்த உத்வேகம்தான் தொடர்ந்து கடிதம் எழுத என்னை ஊக்கப்படுத்தியது.

அப்படியே நாட்கள் சென்றன. ‘எங்க சின்ன ராசா’ திரைப்படம் 1987இல் வெளியானது. அப்படம் குறித்து நான் எழுதிய கடிதத்தைப்படித்துவிட்டு எனக்கு ஒரு பதில் கடிதம் பாக்யராஜ் அனுப்பினார். காவிரி ராஜா என்ற புனைபெயரில்தான் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன். பாக்யராஜ் கைப்பட எழுதிய கடிதத்தில் 'அன்பு காவிரி ராஜா, உங்கள் கடிதம் கண்டேன். உதவி இயக்குநராக ஆசை இருப்பது தெரிகிறது. நேரில் பேசி நிர்ணயிப்போம். இப்படிக்கு காவிரி குளிரில் சந்தோசமாக நனைந்து நடுங்கி உங்க ஆளு கே. பாக்யராஜ்' என எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. பின், பாக்யராஜை சந்திப்பதற்காகச் சென்னை கிளம்பி வந்தேன். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டிற்கு வெளியே பெரிய கும்பல் நிற்கிறது. அந்த சமயத்தில் முன்னணி இயக்குநர் அந்தஸ்தில் பாக்யராஜ் இருந்ததால், அவரிடம் எப்படியாவது உதவி இயக்குநராகவிட வேண்டும், அவரிடம் எப்படியாவது தன்னிடம் உள்ள கதையைச் சொல்லிவிட வேண்டும் என்று நூற்றுக்கணக்கான நபர்கள் அவர் வீட்டிற்கு வெளியே எப்போதும் இருப்பார்கள். நான் பாக்யராஜ் கடிதம் மூலம் வரச் சொன்ன விஷயத்தைக் கூறியதும் என்னை உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தனர். பின், பாக்யராஜுடன் சந்திப்பு நடந்தது. உதவி இயக்குநராகசேர்த்துக்கொள்வதாகக் கூறிய அவர், தொடர்ந்து தொடர்பிலேயே இருங்கள் என்றார்.

பிறகு, ஒரு ஓட்டலில் கதை விவாதத்தில் இருந்த பாக்யராஜை சந்தித்தேன். நான் மாமல்லபுரத்திலுள்ள என் நண்பனுடன் தங்கியிருந்தேன். அந்த விஷயம் தெரிந்ததும் அந்த ஓட்டலிலேயே தங்கச் சொல்லிவிட்டார். அவர்கள் அனைவரும் அன்று இரவு சென்றுவிட்டனர். நான் மட்டும் அந்த அறையில் இருந்தேன். பழைய டேப் ரெக்கார்டர் ஒன்று அங்கிருந்தது. பாடல் கேட்கும்போது அதிலுள்ள வரி மூலம் சில நேரங்களில் கதை கருக்கள் அவருக்கு கிடைக்கும். அதனால் அடிக்கடி பாடல் கேட்பார். அங்கு ஒரு பை இருந்தது. என் கால் தடுக்கி அந்தப் பையிலிருந்த பணம் கொட்டுகிறது. எனக்கு ஒரே ஆச்சர்யம். மறுநாள் அனைவரும் வருகின்றனர். முதலில் வந்த உதவியாளர், ‘நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க’ என்று என்னிடம் கேட்க, ‘பாக்யராஜ் சார்தான் என்னை இங்கேயே தங்கிக்கொள்ளச் சொன்னார்’ என்று அவரிடம் விவரத்தைக் கூறினேன். சிறிது நேரம் கழித்து பாக்யராஜ் வருகிறார். அவரிடம், ‘என்ன சார் கதவு திறந்து கிடக்கு... பணமெல்லாம் இங்க இருக்கு... அந்தப் பையனை வேற இங்க விட்டுட்டுப் போயிருக்கீங்க’ என உதவியாளர் கேட்கிறார். அதற்கு பாக்யராஜ், ‘அவன் உதவி இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் வந்திருக்கிறான். அந்த ஆசை வந்துவிட்டால் கண் முன்னால்கோடி ரூபாய் இருந்தாலும் அதை எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று தோனாது’ என்றார். பாக்யராஜின் இந்த வார்த்தையை இன்றும் என்னால் மறக்க முடியாது.

Actor Senthilkumaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe