Skip to main content

மன்னிப்பு கேட்க துரத்தி வந்த நம்பியார்... தர்மசங்கடத்தில் வேகமாக நடந்த இயக்குநர் மகேந்திரன்!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

senthilkumaran

 

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் ‘சினிமா டைரீஸ்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் அறியாத பக்கங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், இயக்குநர் மகேந்திரனுக்கும் நம்பியாருக்கும் இடையே நடந்த சுவாரசிய சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தமிழ் சினிமா கண்டெடுத்த மாபெரும் இயக்குநர் மேதைகளில் முக்கியமானவர் மகேந்திரன். வசனங்கள் வழியாக இருந்த தமிழ் சினிமாவை கேமராவின் வழியாக நகர்த்தி, நாடகம் வேறு திரைப்படம் வேறு என்பதை எளிய மக்களின் மனதில் கொண்டுபோய் சேர்த்தவர். எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட கல்லூரி விழாவொன்றில் தமிழ் சினிமாவில் இருக்கும் செயற்கைத்தனங்களை நகைச்சுவையாக விமர்சித்து எம்.ஜி.ஆரால் பாராட்டப்பட்டவர். மகேந்திரனின் திறமையைக் கண்ட எம்.ஜி.ஆர். ‘பொன்னியின் செல்வன்’ நாவலுக்கு திரைக்கதை, வசனம் எழுதும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். பின்பு, பல்வேறு காரணங்களால் அந்தப் படம் எடுக்கமுடியாமல் போனது. எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவான ‘காஞ்சித்தலைவன்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பையும் அவர்தான் பெற்றுத்தந்தார். பின்னாட்களில் மகேந்திரன் இயக்குநரான சமயத்தில், உலக சினிமாவிற்கு இணையான திரைமொழியை தமிழ் சினிமாவில் புகுத்தினார். 

 

நான் பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில், ஒரு திரைப்படத்திற்கு எது முக்கியம் என்ற தலைப்பில் சுவாரசியமான பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்காக மகேந்திரனை சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் இயக்கம்தான் முக்கியம் எனப் பேச இருந்தார். அவர் வீட்டிற்குப் பின்னால் வைத்துதான் பேட்டியெடுத்தோம். பேட்டி எடுக்க வந்தவர்தானே என்றெல்லாம் இல்லாமல் மணிக்கணக்கில் என்னிடம் பேசுனார். பேட்டி தவிர்த்து பல விஷயங்கள் குறித்தும் பேசுவார். அவரது பேச்சே கவிதைபோல இருக்கும். 

 

ஒருமுறை நேரு ஸ்டேடியத்தில் சினிமா சம்பந்தமான விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிகழ்ச்சிக்கு நம்பியார் அவர்களும் வந்திருந்தார். அந்த விழாவில் மகேந்திரன் நம்பியாரைப் பார்த்து 'நீங்கள் எவ்வளவு பெரிய கலைஞன்... நீங்க வாழ்கிற காலத்தில் நாங்கள் வாழ்வது எங்களுக்குப் பெருமை' என்றார். அதற்கு, ‘அப்படியா’ என நக்கலாக கேட்டுக்கொண்டே நம்பியார் சென்றுவிட்டார். நான் நம்பியாரிடம் பேட்டி எடுத்திருப்பதால் அவரிடமும் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. அதனால், உடனே நம்பியரிடம் சென்று 'என்ன சாமி அவர் எவ்வளவு பெரிய டைரக்டர்... அவர் சொல்றத நீங்கள் கிண்டல் பண்றீங்க' என உரிமையோடு கேட்டேன். என்னைப் பார்த்து அப்படியா எனக் கேட்ட நம்பியார், மகேந்திரனைப் பார்த்து 'டைரக்டர் சார், ரிப்போர்ட்டர் சார் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்றாரு... என்னை மன்னிச்சுருங்க...' என இரு கைகளையும் உயர்த்திக்கொண்டு மகேந்திரனை நோக்கி மன்னிப்பு கேட்க வருகிறார். அதைப் பார்த்த மகேந்திரன் வேகமாக ஓட ஆரம்பிக்கிறார். ‘டைரக்டர் சார் என்னை மன்னிச்சிருங்க’ எனக் கூறிக்கொண்டே நம்பியார் மகேந்திரனை துரத்தினார். அது காணக் கிடைக்காத காட்சியாக இருந்தது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு எனக்கும் மகேந்திரனுக்கு இடையேயான நட்பு அதிகமாகிவிட்டது. ஏதும் வேலை இல்லையென்றால் இருவரும் எங்காவது சென்று அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம். அவருடைய திரைவாழ்க்கை அனுபவம் குறித்து பலமணி நேரம் பேசுவார். அவரது பேச்சைக் கேட்கையில், அவர் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியைப் பார்த்த அனுபவம் நமக்குக் கிடைக்கும். நடிகர் ரஜினிகாந்த குறித்த அவரது பார்வையே வேறாக இருந்தது. ‘நடிகர் ரஜினி அருமையான நடிகர்... அவரை நடிக்கவே விடமாட்டுக்காங்க... ஹீரோயிசம்னு சொல்லி அவரைக் கெடுத்துட்டாங்க’ என ஆதங்கத்துடன் கூறுவார்.”

 

 

சார்ந்த செய்திகள்