காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னையில் பெரியார் அமைப்பு சார்பில் இன்று (19.09.2025) பேரணி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், “இந்த மாதிரி மனித நேயத்திற்காகவும் மனித விடுதலைக்காகவும் பயன்படாவிட்டால் நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. 

Advertisment

காசாவில் நடந்துகொண்டிருக்கும் படுகொலை என்பது பார்க்கவே சகிக்க முடியவில்லை. எப்படி எந்த மனிதாபிமானத்தோடு அங்கே சென்று குண்டு போடுகிறார்கள். அங்குள்ள குழந்தைகள் சாவதை எல்லாம் பார்க்கும்போது இந்த காசாவின் மீது தாக்குதல் நடத்துபவர் எப்படி நிம்மதியாகப் படுத்துத் தூங்குவார்?. அவருக்கு மனிதாபிமானமே இல்லையா?. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் முழுதாக மனிதன் ஆகவில்லை. பாதி வழியிலேயே அப்படியே நின்றுவிட்டார்கள். அதனால் தான் அந்தப் புத்தி இருக்கிறது. இதனை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இது குறித்து ஐ.நா. சபை முடிவெடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் போது இது மாதிரிதான் இனப்படுகொலை நடக்கிறது. 

இப்படித்தான் இலங்கையிலே தமிழினம் மலர வேண்டும் என்பதற்காகப் பாடுபட்ட தமிழீழ சகோதரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். போராளிகள் மட்டுமல்ல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டார்கள். காசாவிலும் அப்படித்தான் போர் என்ற பெயரில் மொத்த இனத்தையும் அழிப்பதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு அமெரிக்கா துணை போய்க் கொண்டிருக்கிறது. எல்லாரும் நினைக்கலாம் சென்னையில் ஒரு கூட்டம் நடத்தினால் போர் உடனே நின்றுவிடுமா? என்று. அந்தப் போர் நிற்கும். ஏனென்றால் இன்றைக்கு இருக்கிற சோசியல் மீடியாவில், உலகத்தில் நடக்கிற அநீதிகளுக்காக எந்த ஒரு மூலையில் குரல் கொடுத்தாலும் அது உலகம் முழுக்க போய்ச் சேர்ந்துவிடும். 

அமெரிக்காவில் உள்ள பட்டாளத்தில் பணிபுரிகிற ஒரு பெண், இன்னொரு ஆண் அவர்கள் இருவரும் அமெரிக்கா சார்பில் இஸ்ரேலுக்கு ஏவுகணைகளும் ஆயுதங்களும் கொடுக்கக் கூடாது என்று கூறுகின்றனர். இதற்காக அவர்களைக் கைது செய்யும்போது தனியாக ஒரு பெண்ணும் தனியாக ஒரு ஆணும் அமெரிக்கப் படையிலே வேலை செய்பவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் உரக்கக் குரல் கொடுத்திருக்கிறார்கள். அதனைப் பார்க்கும் பொழுது அப்படி நமக்குள்ளே ஒரு உணர்ச்சி கொந்தளிக்கிறது. இந்த மாதிரி கூட்டத்தில் கலந்துகொள்வது எங்களை மாதிரி கலைஞர்களுடைய கடமை. இங்கு இருக்கும் தலைவர்களுக்கும், தோழர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் சினிமாவில் நான் பிரகாஷ்ராஜ், வெற்றிமாறன், அமீர் எல்லாரும் நடிக்கிறோம். அது ஒரு வியாபாரம். எங்களிடம் கொஞ்சம் திறமை இருக்கிறது. 

Advertisment

அந்தத் திறமையை வைத்து நாங்கள் சம்பாதிக்கிறோம். எங்கள் குடும்பத்தை காப்பாத்துறோம். ஆனால் எங்களுடைய பாப்புலாரிட்டி, எங்களுடைய பிரபலம், எங்களுடைய புகழ் இந்த மாதிரி மனித நேயத்திற்காகவும் மனித விடுதலைக்காகவும் பயன்படாவிட்டால் நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்தத் தலைவர்கள் போராடுகிறார்கள் . அவர்களுக்கு எல்லாம் சிறைச்சாலை என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. திருமுருகன் காந்திக்கு எல்லாம் அது ஒரு சாதாரண விஷயம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அத்தனை தலைவர்களும் அவர்களுக்கு எல்லாம் இந்தப் போராட்டம் போலீஸ் அடி, , சிறைச்சாலை எல்லாம் சாதாரண விஷயம். 

திருமாவளவன் போன்றவர்கள் தான் உண்மையான ஹீரோ. இந்த மேடையில் உட்கார்ந்துள்ளவர்கள் தான் ரியல் ஹீரோஸ். நாங்கள் எல்லாம் நிழல் ஹீரோஸ். அதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற உலகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது அனைத்து மக்களும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். இதில் மதம் கிடையாது, ஜாதி கிடையாது, கடவுள் கிடையாது, நாடு கிடையாது, எதுவும் கிடையாது. மனிதநேயம் ஒன்றுதான் இருக்கிறது என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” எனப் பேசினார்.