Advertisment

உங்களை மிஸ் பண்றோம் 'பார்த்தா'! சந்தானத்திற்கு பர்த்டே மெசேஜ்!

Santhanam

தொலைக்காட்சி நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, திரைப்படக் காமெடி நடிகர், கதாநாயகன் எனத் தன்னுடைய கடின உழைப்பால் தொடர்ந்து பரிணமித்து வருபவர் நடிகர் சந்தானம். தமிழ் சினிமா என்பது கதாநாயகர்களை மையப்படுத்தியதேயாகும். ஒரு திரைப்படம் என்பது கூட்டு முயற்சியின் வடிவமாக இருந்தாலும், வெகுசன மக்களைப் பொறுத்தவரை திரைப்படத்தின் முகம் மட்டுமின்றி அனைத்தும் கதாநாயகர்களே. ஆகையால்தான், வேறெங்கும் இல்லாத அளவிற்கு நாயக பிம்பம் இங்கு வலுவாக வேரூன்றியுள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக மக்களிடம் அதிகம் பரிட்சயம் பெறுவது காமெடி நடிகர்கள்தான். இதில், என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களைத் தொடர்ந்து 2000-த்தின் தொடக்கத்தில் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார் நடிகர் சந்தானம்.

Advertisment

ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான'டீக்கடை பென்ச்' என்ற நிகழ்ச்சியே நடிகர் சந்தானம் சின்னத்திரையில் தனது முகத்தைக் காட்டிய முதல் நிகழ்ச்சியாகும். பின், வேறொரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'லொல்லு சபா' நிகழ்ச்சி சந்தானத்தைப் பலரிடம் கொண்டு சேர்த்தது. அதன்பிறகு, சில திரைப்படங்களில், கூட்டத்தில் ஒருவராகத் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்த சந்தானத்திற்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும்படியான படமாக அமைந்தது சிம்பு நடிப்பில் வெளியான 'மன்மதன்' திரைப்படம். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'பொல்லாதவன்' திரைப்படத்திலும் சந்தானத்தின் காமெடிகள் பாராட்டப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் மற்றும் சந்தானம் கூட்டணிக்கென்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. இவர்கள் கூட்டணியில் வெளியான 'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்ற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றதோடு மட்டுமின்றி இப்படத்தில் இடம் பெற்றிருந்த காமெடி காட்சிகள் அனைத்தும் 'எவர்க்ரீன்' காமெடிகளாகின. 'பார்த்தா', 'நல்ல தம்பி', 'மோக்கியா', 'காட்டுப்பூச்சி' ஆகிய கதாபாத்திரங்கள் என்றும் காமெடி பிரியர்கள் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியவை.

Advertisment

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமகாலத்து காமெடி நடிகர் யாராவது ஒருவர் ஏற்படுத்தும் தாக்கத்தால் காமெடி காட்சிகளுக்கான வரையறை மாறுவது வழக்கம். செந்தில், கவுண்டமணி காலத்தில் இருந்த காமெடி காட்சிகளுக்கான வடிவம், தமிழ் சினிமாவிற்கான காமெடி முகம் வடிவேலு வசமானதும் வேறு வடிவம் கொண்டது. அதே காலகட்டத்தில் வேறுவேறு காமெடி நடிகர்கள் இருந்தாலும், இவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தைத்தான் அவர்களும் பின்பற்றியாக வேண்டிவரும். இவ்வாறான ட்ரெண்ட் செட்டர்கள் வரிசையிலும் தனக்கான இடத்தைப் பிடித்தார் நடிகர் சந்தானம். இன்று கதையின் போக்கில் இயல்பாக அமையும் காமெடி காட்சிகள், மையக் கதாபாத்திரத்தைக் கேலிக்குள்ளாக்குவது போன்ற தமிழ் சினிமாவின் சமீபத்திய காமெடி போக்குகளுக்கான விதை நடிகர் சந்தானம் போட்டதேயாகும். அதற்கு முன்பு கவுண்டமணி இந்த பாணியில் ஒரு ராஜாங்கமே நடத்தியிருந்தாலும், அதன் பின்னர் ஒரு பெரிய இடைவெளி விழுந்தது. அதை மீண்டும் கையில் எடுத்தார் சந்தானம். ஆனால், அப்படியே அல்ல. வடிவேலுவின் பாடி லாங்குவேஜ், கவுண்டமணியின் கவுன்டர்கள், செந்திலின் தன்னைத் தாழ்த்திக்கொள்வது எனப் பல கதாபாத்திரங்களின் வடிகட்டிய வடிவமே நடிகர் சந்தானம். அவருக்குப் பிறகு வந்த சதீஷ் மற்றும் யோகி பாபு ரசிகர்களைச் சிரிக்க வைப்பதற்குப் பயன்படுத்தும் உத்திகள் பல சந்தானம் அறிமுகம் செய்ததே.

இன்று கதாநாயகனாக அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிக்கக்கூடிய, சிரிக்கக்கூடிய அளவில் இருந்தாலும் மீண்டும் காமெடி நடிகர் பாத்திரம் ஏற்று நடிக்கும் சந்தானத்தைத் திரையில் பார்க்க வேண்டுமென்பதே பலரது விருப்பமாக உள்ளது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe