Advertisment

“ஆணவக்கொலை வன்முறை அல்ல அக்கறை” - ரஞ்சித் புது விளக்கம்

actor ranjith honor incident controversy speech

90-களில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான ரஞ்சித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹூரோவாக நடித்துள்ள படம் கவுண்டம்பாளையம். இப்படத்தை அவரே இயக்கவும் செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், அதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியது. இப்படம் கடந்த மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில் திடீரென படம் தள்ளி போகவுள்ளதாக தெரிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், இப்படத்தை வெளியிடக்கூடாது எனத் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல் வருவதாகத் தெரிவித்தார். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் பழனிசாமி, இப்படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, எந்தத் திரையரங்குகளில் பாதுகாப்பு தேவை என்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் படக்குழு மனு அளிக்கும் பட்சத்தில், அந்தத் திரையரங்குளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இப்படம் நேற்று(09.08.2024) திரையரங்குகளில் வெளியானது. நடிகர் ரஞ்சித் சேலம் மாவட்டம், கரூப்பூரில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ரசிகர்களுடன் படம் பார்த்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொங்குப் பகுதியில் கவுண்டம்பாளையம், கவுண்டம்பட்டி என பல ஊர்கள் இருக்கிறது. இந்தப் படத்தை சாதி படம் என்கிறார்கள். அது பார்ப்பவர்கள் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. என்னைப் பற்றி எதாவது வன்மம் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்கிறார்கள். என்னை புறக்கணிக்க வேண்டும் என்பதே அவர்களது மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறார்கள். நான் உச்ச நட்சத்திரம் கிடையாது. ஏழை, எளிய கலைஞன். நல்ல படத்தை எடுத்திருக்கிறேன். நேர்மையான குடும்ப படத்தை எடுத்திருக்கிறேன். தகப்பனுடைய வலியை சொல்லவும் பெண்களில் எதிர்காலத்திற்காகவும் படம் எடுத்திருக்கிறேன்” என்றார்.

Advertisment

அப்போது அவரிடம் ஆணவப் படுகொலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது, “அது எமோஷன் தான். நம்முடைய பைக்கை ஒருத்தன் திருடிட்டு போனால், உடனே திருடனை கோவப்பட்டு அடிக்கிறோம். அப்படி இருக்கும் போது தன்னுடைய வாழ்க்கையே தனது பிள்ளைகள் தான் என வாழ்கிறவன், பிள்ளைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிற மாதிரி ஒரு விஷயம் நடக்கும் போது, பெற்றோரின் கோவம் அக்கறையில் தான் வருகிறது. அது வன்முறை அல்ல. கலவரமும் அல்ல. என்னை எதிர்ப்பவர்கள் இந்தப் படத்தை வந்து பாருங்கள்” என்றார்.

சாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் ஆணவக்கொலை என்பது வன்முறை அல்ல அக்கறைதான் என ரஞ்சித் புது விளக்கம் கொடுத்துள்ளது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு முன்பாக இவர் சுயமரியாதை திருமணம், ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற விஷயங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe