Skip to main content

அது நீங்க இல்ல; நான்தான்... ரமேஷ் கண்ணா கூறியதைக் கேட்டு வாய்விட்டு சிரித்த ரஜினிகாந்த்!

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

ramesh khanna

 

ரஜினிகாந்த், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கோச்சடையான் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்தச் சூழலில், நடிகரும் கதையாசிரியருமான ரமேஷ் கண்ணா கோச்சடையான் படத்தில் பணியாற்றியது குறித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடனான நினைவுகள் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

 

கோச்சடையான் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்கள்? 

 

கோச்சடையான் படம் பற்றி பேசவேண்டுமென்றால் நிறைய விஷயங்கள் உள்ளன. இப்படத்திற்கான பாராட்டுகள் அனைத்தும் சௌந்தர்யா மேடமைத்தான் சேரும். கார்ட்டூன்ல படம் எடுக்க வேண்டும் என்ற ஐடியாவை முதலில் அவர்தான் கூறினார்.  நாங்கள் ராணா படம் தொடர்பான வேலையில் இருந்தோம். அந்த நேரத்தில் ரஜினி சாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இந்த கார்ட்டூன் படத்தையே எடுக்கலாம் என முடிவெடுத்தோம். ராணா படத்தில் இடம்பெற்றிருந்த ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து கோச்சடையான் கதையை உருவாக்கினோம். ஜேம்ஸ் பாண்ட் ஷூட்டிங் நடந்த ஸ்டூடியோவில்தான் இந்த படத்தை எடுத்தோம்.

 

மறைந்த காமெடி நடிகர் நாகேஷை படத்தில் கொண்டுவந்தது ஏன்?

 

அனிமேஷன் மூலம் ஒருவரை வயதானவராக மாற்றலாம், வயது குறைத்து காட்டலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என சௌந்தர்யா மேடம் கூறினார். அந்த நேரத்தில், மறைந்த காமெடி நடிகர் நாகேஷை கதையில் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டுவந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. எனக்கு, ரஜினி சாருக்கு, கமல் சாருக்கு, பாலசந்தர் சாருக்கு என அனைவருக்கும் பிடித்த ஒரு காமெடி கேரக்டர் நாகேஷ் கேரக்டர். சௌந்தர்யா மேடமும் சரி என்று சொல்லிவிட்டதால் அந்தக் கேரக்டரை படத்தில் கொண்டுவந்தோம். படத்தில் நாகேஷை கொண்டுவந்தது குறித்து ஏ.ஆர்.ரஹ்மானும் பாராட்டினார். முதலில் அந்தக் கதாபாத்திரத்தில் வேறு ஒருவர்தான் நடிக்க இருந்தது. அவர் நடிப்பு சரியாக இல்லாததால் நானே நடித்தேன்.  

 

லண்டனில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் எப்படி இருந்தது?

 

லண்டன் விமான நிலையத்திலேயே ஒரு சம்பவம் நடந்தது. அதுபற்றி நான் அதிகம் வெளியே கூறியதில்லை. நாங்கள் அனைவரும் லண்டன் விமான நிலையத்தில் இறங்கியதும் அங்கிருந்த அதிகாரிகள் என்னைத் தனியே உட்காரவைத்துவிட்டார்கள். எதற்காக பிடித்துவைத்துள்ளார்கள் என்று எனக்குப் புரியவில்லை. விஷயம் தெரிந்ததும் ரஜினி சார் உட்பட முன்னால் சென்ற அனைவரும் வந்துவிடுகின்றனர். அவர்கள் யாரையும் அருகில் அனுமதிக்காத போலீசார் என்னை விடமுடியாது என்று கூறி அவர்களை அனுப்பிவிடுகின்றனர். எனக்குத் தெரிந்த இங்கிலீஷில் நான் பேசிப்பார்த்தேன். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. அதன் பிறகு, விக்கிப்பீடியாவில் நான் யாரென்று பார்த்து உறுதிசெய்துவிட்டு என்னை அனுப்பினார்கள். 

 

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் குறித்து கூறுங்கள்.

 

கோச்சடையான் ஷூட்டிங்கின்போது தீபிகா படுகோனுக்கு நான்தான் வசனம் சொல்லிக்கொடுப்பேன். நானும் உடன்நடிக்க வேண்டியிருந்ததால் நாகேஷ் கெட்டப்பில்தான் இருப்பேன். ஒருநாள் படப்பிடிப்பு முடிந்தபிறகு அவரிடம் சென்று உங்களுடன் ஒரு ஃபோட்டோ எடுக்க வேண்டும் என்றேன். இந்த உடையில் நான் ஃபோட்டோ எடுத்துக்கொள்ள முடியாது எனத் தீபிகா படுகோன் கூறிவிட்டார். உனக்கு காலைல வசனம் சொல்லிக்கொடுத்தது நான்தான் என்றவுடன் சார் நீங்களா... மீசை இல்லாமல் பார்த்ததால் அடையாளமே தெரியவில்லை என்றார். பின், இருவரும் ஃபோட்டோ எடுத்துக்கொண்டோம். 

 

மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரஜினி சார் வந்தார். படப்பிடிப்பெல்லாம் எப்படி நடக்கிறது என என்னிடம் கேட்டார். நல்லா போய்கிட்டு இருக்கு சார் எனக் கூறிவிட்டு, தீபிகா படுகோனுடன் நடித்த முதல் தமிழ் நடிகர் என்பது பெருமைதான் சார் என்றேன். உடனே அவர் சிரித்தார். சார்... நான் என்ன சொன்னேன்... நான் நேத்தே நடிச்சிட்டேன்... நீங்க இரண்டாவது நடிகர்தான் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே அதை ஜாலியாக எடுத்துக்கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்