Skip to main content

'சர்கார்' விஜய் வழியில் ரஜினி தர்பார்? ப்ரஸ்மீட்டில் சொன்ன புது மாடல்

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று கடந்த 2017ஆம் ஆண்டு அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தை கட்டமைக்கும் பணிகளிலும் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். இடையிடையே படங்களிலும் நடித்து வந்தார். 'போர் வரும்போது  பார்த்துக்கொள்ளலாம்' என்று கூறியிருந்த அவர் தேர்தல் நெருங்குவதால் கட்சியை தொடங்குவார் என்ற நம்பிக்கையில் ரஜினி ரசிகர்கள், மக்கள் மன்ற நிர்வாகிகள் இருக்கின்றனர். சமீபத்தில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், பணிகள் எல்லாம் சிறப்பாக நடப்பதாகவும் ஆனால் தனக்கு ஒரு ஏமாற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். அது என்ன ஏமாற்றம் என்பது குறித்து பல விவாதங்கள் நடந்துவந்தன. இந்நிலையில் இன்று, சற்று நேரத்துக்கு முன்பு சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

rajinikanth

செய்தியாளர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசியதிலிருந்து...

"நான் அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவேண்டுமென நினைத்திருந்தால் 1996லேயே வந்திருப்பேன். அப்போது என்னை முக்கிய அரசியல் புள்ளிகள் பலரும் அழைத்தனர். மூப்பனார் அழைத்தார், சிதம்பரம் அழைத்தார், இன்னும் பலர் அழைத்தனர். ஆனால், நான் அதிகாரத்திற்கு வர ஆசைப்படவில்லை. அதனால் அப்போது நேரடியாக வராமல், எனது ஆதரவை தெரிவித்தேன். அப்போது வராத ஆசை இப்போது வருமா?" என்று தனக்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லை என்பதை விளக்கிய அவர், தான் விரும்பும் அரசியல், ஆட்சி மாதிரியை விளக்கினார். "முதல்வர் மற்றும் அமைச்சர் பதவிகளில் நன்கு படித்தவர்கள், பக்குவமும் இளமையும் உள்ளவர்கள் இருக்கவேண்டும். கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்றுதான் இருக்கும். கட்சியில் இருப்பவர்கள் ஒரு எதிர்க்கட்சியை போல செயல்படுவார்கள். ஆட்சியில் தலையிட்டு தொல்லை தரமாட்டார்கள். தேர்தல் பணிக்காக உருவாக்கப்படும் பதவிகள் தேர்தலுக்குப் பிறகு கலைக்கப்படும். ஒரு நல்லாட்சி நடக்கும். இப்படி ஒரு பெரிய மாற்றத்துக்கு இந்த ரஜினிகாந்த் ஒரு வழியாக அமைவேன். என் மூலமாக இந்த மாற்றம் நடக்கவேண்டுமே தவிர எனக்குப் பதவி வேண்டாம்" என்று கூறினார்.

 

sarkar vijay

 

ரஜினி கூறிய இந்த மாடல் கிட்டத்தட்ட 'சர்கார்' பட க்ளைமாக்சில் விஜய் கூறிய மாடலை ஒட்டி இருந்தது. 'சர்கார்' படத்தில் தன் ஓட்டுரிமைக்காக போராட களத்தில் இறங்கும் பெரும் பிசினஸ்மேன், அரசியல் களத்தில் இறங்கி மிகப்பெரிய மாற்றத்துக்கு வழி செய்து, எம்.எல்.ஏவாகி தன்னுடன் களமாடி ஜெயித்த எம்.எல்.ஏக்களுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு வந்தவுடன், தான் முதல்வர் பதவியேற்காமல் வேறு ஒரு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அந்தப் பதவிக்கு முன்மொழிவார். தான் ஒரு எதிர்க்கட்சி போல செயல்படுவேன் என்று கூறுவார். கிட்டத்தட்ட அதே பாணியில் செல்வதுதான் தனக்கு விருப்பமான அரசியல் என்று சொன்ன ரஜினி, தேர்தலில் நிற்பேனென்று கூட சொல்லவில்லை. அவர் சொன்னபடி, முழுக்க வெளியில் இருந்து உழைப்பேன் என்றுதான் கூறியிருக்கிறார். இப்படி பல திட்டங்களை கூறிய ரஜினி, இறுதியாக இளைஞர்களிடம் முழு எழுச்சி வந்தவுடன் தான் களமிறங்குவேன் என்று கூறினார். கட்சிப்பணிகள் தொடருமென்று அர்த்தப்பட பேசிய ரஜினி, தான் நேரடி அரசியலுக்கு வருவதை இன்னும் ஒரு கேள்விக்குறியாகவே விட்டுச் சென்றிருக்கிறார். ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.   

 

 

சார்ந்த செய்திகள்