
பிரபல நடிகர் பிருத்விராஜூக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அவரே அதுகுறித்து பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “திஜோ ஜோஸ் ஆண்டனியின் 'ஜன கண மன' ஷூட்டிங்கில் அக்டோபர் 7-ஆம் தேதியிலிருந்து பணியாற்றி வருகிறேன். கோவிட் தொற்றைத் தடுக்க அதற்கான விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றினோம். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தோம்.
விதிமுறைகளுக்கு ஏற்ப படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னாலும், கடைசி நாள் படப்பிடிப்புக்குப் பிறகும் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாகக் கடைசியாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் எனக்குத் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. நான் தனிமையில் இருக்கிறேன். எனக்குக் கரோனா அறிகுறிகள் இல்லை. நலமாக இருக்கிறேன்.
என்னுடன் தொடர்பிலிருப்பவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன்.
விரைவில் குணமாகி வேலைக்குத் திரும்புவேன் என நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.