prasanna

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் கோடைக்காலம் காரணமாகவும், கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் வீட்டிலேயே அடங்கியிருப்பதால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

Advertisment

Advertisment

இதற்கிடையே கரோனாவால் திரையுலகமும் முடங்கியுள்ளதால் திரையுலகினர் பலரும் வீட்டிலேயே இருந்து கொண்டு சமூகவலைத்தளங்களில் மற்ற திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பிரசன்னா மின்சார வாரியம் குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில்... ''இந்தக் கோவிட் லாக்டவுனுக்கு மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கொள்ளையடிக்கும் செயலில் உற்சாகமாக ஈடுபட்டிருப்பதாக உங்களில் எத்தனை பேர் நினைக்கிறீர்கள்..?'' எனப் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம், பிரசன்னாவின் ட்வீட்டிற்குப் பதிலடி தரும் வகையில் பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், மின் கட்டணம் அதிகமானதுக்குமான காரணத்தை அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரசன்னா. அதில், “உண்மைதான்‌! ரீடிங்‌ எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள்‌ பொதுவாகக் கட்டணம்‌ செலுத்தும்‌ பழக்கமுள்ள நான்‌, மார்ச்‌ மாதம்‌ ரீடிங்‌ எடுக்காததால்‌ கட்டணம்‌ செலுத்தத் தவறியது உண்மைதான். அதே அளவு இதற்குமுன்‌ காலதாமதமின்றி தவறாமல்‌ கட்டணம்‌ செலுத்திவருகிறேன்‌ என்பதும்‌ உண்மை. வாரியம்‌ சொல்வதுபோல்‌ நான்கு மாதக் கணக்கீட்டாலும்‌ மார்ச்‌ மாதக் கட்டணம்‌ சேர்த்தும்‌ எனக்குத் தனிப்பட்ட கட்டணம்‌ கூடுதலாக வந்திருக்கலாம்‌. என்‌ தனிப்பட்ட பிரச்சினையாக இதை நான்‌ எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர்‌ நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என்‌ ட்வீட்‌.

மின்வாரியத்தைக் குறை சொல்வதோ குற்றம்‌ சாட்டுவதோ என்‌ நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும்‌ வந்திருப்பதாகச் சொல்லப்படும்‌ அதிக கட்டணம்‌ குறித்த கவன ஈர்ப்பும், அதன்மூலம்‌ வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில்‌ ஏதாவது முறையில்‌ இப்பிரச்சினையில்‌ மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம்‌ செலுத்தத் தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின்‌ மிக்க உதவியாக இருக்கும்‌ என்பதே என்‌ வேண்டுகோள்‌.

http://onelink.to/nknapp

நேற்றைய தொலைக்காட்சி உரையாடலிலும்‌ அதையே நான்‌ குறிப்பிட்டிருக்கிறேன்‌. ஊரடங்கு காலங்களில்‌ மருத்துவ, காவல்‌, சுகாதாரத் துறைகள்‌ போலவே மின்வாரிய ஊழியர்களும்‌, அதிகாரிகளும்‌ அயராது பணியாற்றியிருக்கிறார்கள்‌ என்பதை நன்றியோடு பாராட்டவும்‌ நான்‌ மறக்கவில்லை. மற்றபடி வாரியத்தையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. உள்நோக்கமில்லாத போதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனநோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன்‌. மக்கள்‌ மீது விழுந்திருக்கும்‌ இந்த எதிர்பாரா சுமையை வாரியமும்‌ அரசும்‌ இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன்‌.

பிகு: என்‌ வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழுத் தொகையும்‌ எந்த நிலுவையுமின்றி இன்று காலை நான்‌ செலுத்திவிட்டேன்‌" என்று தெரிவித்துள்ளார்.