காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் சென்னையில் பெரியார் அமைப்பு சார்பில் இன்று (19.08.2025) பேரணி நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், வெற்றிமாறன், அமீர் உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், “எங்களை நிறையப் பேர் கேட்பார்கள் நீங்கள் எல்லாம் கலைஞர்கள் ஏன் வருகிறீர்கள் என்று. ஒரு அநியாயத்துக்கு எதிராகப் பேசுவது அரசியல் என்றால் நாங்கள் அரசியல் தான் பேசுவோம். 

Advertisment

ஒரு கவிதை இருக்கிறது. இந்தப் போர் இருக்கிறது இல்லையா?. போர் முடிந்துவிடும். தலைவர்கள் எல்லாம் கைகுலுக்கி விட்டுக் கிளம்பிவிடுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அங்கே ஒரு கிழவி தன் மகனுக்காகக் காத்திருப்பாள். ஒரு பெண் தன் புருஷனுக்காகக் காத்திருப்பாள். குழந்தைகள் அப்பாவுக்காகக் காத்திருப்பார்கள். இந்த நாடு இந்த மண்ணை விற்றது யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதோட விலை கொடுத்தது யார் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் மௌனமாக இருந்தால் இதுதான் நடக்கும். இதை ஏன் கலைஞர்கள் பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பதில் இருக்கிறது. அங்கேயும் கவிஞன் ஒருத்தன் சொல்கிறான் என் கவிதையில் அரசியல் வேண்டாம் என்றால் எனக்குப் பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும். பறவைகளின் சத்தம் கேட்க வேண்டும் என்றால் யுத்த விமானங்களின் சத்தம் அடங்க வேண்டும். 

நாம் எல்லாரும் சேர்ந்து இந்த உலகத்துக்குச் சொல்ல வேண்டியது என்னவென்றால் நம்முடைய தனிப்பட்ட உடம்புக்கு ஒரு காயம் என்றால் நாம் மௌனமாக இருந்தாலும் குணமாகிவிடும். ஆனால் ஒரு நாட்டுக்கு ஒரு மனிதநேயத்துக்கு ஒரு காயம் என்றால் நான் சும்மா இருந்தால், மௌனமாக இருந்தால் அதிகமாகும். அதனால் சாகிறதுக்கு முன்னாடி சாகக்கூடாது. போராடுவோம். இந்தக் குரல் நிற்கும். காசாவில் என்ன நடக்கிறது. இதற்கு இஸ்ரேல் மட்டும் காரணம் இல்லை. அதற்குத் துணையாக இருக்கிற அமெரிக்காவும் காரணம். அதற்கு மௌனமாக இருக்கிற பிரதமர் மோடியும் காரணம். அதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதனும் காரணம்” எனப் பேசினார்.