/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Nasar.jpg)
கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் நாசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் நாசர் பேசியதாவது: “கலைஞர் அவர்களைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் எனக்கு இருக்கின்றன. கலைஞரோடு நான் பழகிய தருணங்கள் என் வாழ்க்கையில் மிகச் சிறந்தவை;மறக்க முடியாதவை. அப்படிப்பட்ட தருணங்களை எனக்கு வழங்கிய என் கலைஞருக்காக நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். பள்ளியில் நாடகங்களில் நடிக்கும்போது அவருடைய வசனங்கள் தான் எங்களுக்கான முதல் பயிற்சி. கலைஞருடைய வசனங்களைப் பேசுவதில் ஒரு பெரிய சுகம் இருக்கிறது. நான் பல போட்டிகளில் அவருடைய வசனங்களைப் பேசி பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.
சினிமா வாய்ப்பு வாங்குவதற்குக் கூட பராசக்தி வசனங்களைத் தான் நான் பேசினேன். நான் அரசியல்வாதி அல்ல. ஆனால் அரசியலை அறிந்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. அறிவுரீதியாக நான் அரசியலைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். தான் எழுதிக் கொடுத்த வசனங்களை எவ்வாறு படமாக்குகிறார்கள் என்பதை கலைஞர் பெரும்பாலும் நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கே சென்று பார்ப்பார். என்னுடைய கலைவாழ்வில் முக்கியமான ஒரு படைப்பு கலைஞர் எழுதிய தென்பாண்டிசிங்கம் நாடகம்.
கலைஞர் என்னை வீட்டுக்கு அழைத்தபோது பதற்றத்துடன் சென்றேன். அங்கு அவர் அவராகவே இருந்தார். என்னை அவ்வளவு அன்புடன் நடத்தினார். அவர் எழுதிய பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். அவர் போன்ற எளிமையான மனிதரை நான் பார்த்ததில்லை. அவர் என்னை பயமுறுத்தும் ஒரு தலைவனாக எப்போதுமே இருந்ததில்லை. ஒரு உறவினர் போல் என்னோடு அவர் பேசுவார். அதே நேரத்தில் தான் நம்புகின்ற கொள்கைக்கு எதிராக இருப்பவர்களிடம் தீப்பிழம்பாக அவர் நிற்பார். அதுதான் கலைஞர்.
அவர் எழுதிய ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு செய்தி. ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு கொள்கை. சமீபத்தில் வெளிவந்த 'தலைவி' என்கிற படத்தில் நான் கலைஞராக நடித்தேன். நான் ஆராதிக்கின்ற ஒரு மனிதனாக நான் நடிப்பது என்பது மிகப்பெரிய பெருமை. அதையே என் வாழ்க்கையின் முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். அவருடைய இளம் வயதில் அவர் பேசிய பேச்சுக்கள் நேற்று பேசியவை போல் இருக்கின்றன. சினிமாவில் எவ்வளவோ வேடங்களில் நடித்திருந்தாலும் கலைஞர் வேடத்தில் நடிக்கும்போது எனக்கு ஒரு பதற்றம் இருந்தது. மிகுந்த பெருமித உணர்வோடு அதில் நான் நடித்து முடித்தேன். கலைஞரை நான் காலம் முழுவதும் கொண்டாடுவேன்.”
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)