actor Mukesh mla has been removed from the board of the Kerala government

மலையாளத் திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு கமிஷன் அமைத்தது கேரள அரசு.

இந்த கமிஷன் 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, மேலும் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித் மீதும், மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் சித்திக் மற்றும் ரியாஸ் கான் மீதும் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். ஆனால் புகார் சுமத்தப்பட்ட மூன்று பேருமே நடிகைகளின் குற்றச்சாட்டை மறுத்திருந்தனர். இதில் ரஞ்சித் மற்றும் நடிகர் சித்திக் இருவரும் இந்த புகார்களைத் தொடர்ந்து அவர்கள் வகித்து வந்த சங்கம் தொடர்பான பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் இரண்டு பேர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தொடர் பாலியல் புகார்கள் தொடர்பாக மலையாள நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’ அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள், தார்மீக பொறுப்பேற்று தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனிடையே நடிகை மினுமுனீர் நடிகர் மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முகேஷ் மற்றும் மணியன் பிள்ளை ராஜு, இடைவேளை பாபு, ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் கேரள அரசின் குழுவில் இருந்து முகேஷ் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள அரசு சார்பில் கேரள படப்பிடிப்புக்கு ஏற்ற இடம் என்ற வகையில் கொள்கை வகுப்பதற்காக, கடந்த ஆண்டு குழு அமைக்கப்பட்டது. இதில், நடிகரும் கொல்லம் சட்டமன்ற உறுப்பினருமான முகேஷ் இடம்பெற்றார். அவருடன் மஞ்சு வாரியர், பத்மப்பிரியா, நிகிலா விமல் உள்ளிட்ட 10 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த சூழலில் நடிகர் மற்றும் எம்.எல்.ஏ முகேஷ் மீது மினுமுனீர் பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.