actor  MS Bhaskar condemns Nanguneri incident

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. முனியாண்டி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சின்னத்துரை என்ற 17 வயது மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இவர்களது வீட்டில் கடந்த 10 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில், சின்னத்துரை படிக்கும் பள்ளியில் சில மாணவர்கள் அவரைத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இதுகுறித்து பெற்றோரிடமும் தலைமையாசிரியரிடமும் சின்னத்துரை கூறியுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள், வீடு புகுந்து அரிவாளால் வெட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதைக் கண்டித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரையின் தாயிடம், தமிழக அரசின் சார்பில் முதல் கட்டமாக 1 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் நிவாரண நிதியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் வழங்கினார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியும் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர் சின்னதுரையின் தாயாரிடம் வீடியோ கால் மூலமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அப்போது, “தைரியமா இருங்க. எதுக்கும் கவலைப்படாதீங்க” என முதல்வர் ஆறுதல் தெரிவித்திருந்தார்.

Advertisment

actor  MS Bhaskar condemns Nanguneri incident

இந்நிலையில் திரைப்பட நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில்,

“ வேற்றுமை கூடாது என்பதற்காகத்தானே மாணவ மாணவியர்க்கு சீருடை....

மாணவனை மாணவர்களே கொடுமையாகதாக்குவது எவ்வகையில் நியாயம்....

சின்னதுரை படிக்கக்கூடாதா...

சிறந்து விளங்கக்கூடாதா...

பிஞ்சு மனங்களில் நஞ்சா....

சிரத்தில் அறிவை இழந்து கரத்தில் அரிவாளை ஏந்துவதா....

சாதி இரண்டொழிய வேறில்லை என்று ஔவை மூதாட்டி எழுதியது பொய்யா....

கற்காலத்தில் சாதி இல்லை...

தற்காலத்தில் மனிதநேயமே இல்லை....

எங்கே போகிறது என் நாடு.....

என்ன சொல்வது என்றே புரியவில்லை..

நாங்குநேரி மாணவன் மீதும் அவரது சகோதரி மீதும் நடந்த தாக்குதலை கனத்த இதயத்தோடு வன்மையாக கண்டிக்கிறேன்....

இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உயிரிழந்தவருக்கு என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

தவறு செய்தவர்கள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை!

இனி வரும் காலத்தில் இவ்வாறு நிகழா வண்ணம் சட்டம் தன் கடமையை கடுமையாக செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்....

சின்னதுரையும் அவரது சகோதரியும் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.