Skip to main content

தொடரும் விமான நிலைய புகார்கள்: "தமிழ்நாட்டில் சிறந்த இடங்கள் இல்லையா?" - பிரபல நடிகர் கேள்வி

 

actor kiran chennai airport issue

 

தமிழில், வேலையில்லா பட்டதாரி, வலிமை, வாரிசு உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் இரண்டாம் உலகம், டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குநராகவும் பணியாற்றியவர் கிரண். இவர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக சென்னை விமான நிலையத்தில் மற்ற மாநிலங்கள் குறித்து சிறந்த இடங்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் போது தமிழ்நாட்டின் சிறப்பு இடங்களின் புகைப்படங்கள் ஏன் இடம்பெறவில்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சென்னை விமான நிலையத்தில் மற்ற நாட்டில் உள்ள சிறந்த இடங்களின் படங்களை வைத்துள்ளார்கள்; ஏன்? தமிழ்நாட்டில் சிறந்த இடங்கள் இல்லையா? இல்லை அவர்களுக்கு தெரியவில்லையா? இது தமிழ்நாட்டின் விமான நிலையம் தானே? வேறு ஊரில் இப்படி இல்லையே? இங்கு மட்டும் ஏன் இப்படி? விமான நிலையத்திற்கு தான் பல மாநிலங்களில் இருந்தும் பல நாட்டில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நம் கலாச்சாரமும் நமது கலை மற்றும் பண்பாட்டையும் நாம் தானே காட்ட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இவரது பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவ தமிழ்நாட்டு மக்கள் பலரும் சென்னை விமான நிலைய பக்கத்தை டேக் செய்து கேள்வி கேட்டு பதிவுகளைப் பகிர ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் கிரணின் கேள்விக்கு சென்னை விமான நிலையம் பதிலளித்துள்ளது. அந்த பதிவில், "உங்கள் கருத்து குறித்து ஆலோசிக்கப்படும். வரும் நாட்களில் அந்த புகைப்படங்கள் மறுசீரமைக்கப்படும். மேலும் தமிழகத்தின் சிறந்த இடங்களுக்கு விமான நிலையத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்கள். 

 

விமான நிலையங்களில் சமீப காலமாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. நடிகர் சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி 'சிஆர்பிஎப்’ (CRPF) அதிகாரிகள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து நடிகை சனம் ஷெட்டி, கோவை விமான நிலையத்தில் மத ரீதியாக ஊழியர்கள் பாகுபாடு காட்டுவதாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகரும் கலை இயக்குநருமான கிரண் விமான நிலையம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.