தமிழில் ரஜினி நடித்த ‘அதிசியபிறவி’ விஜய் நடித்த ‘போக்கிரி’, விக்ரம் நடித்த கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து கவனம் பெற்றவர் கிங்காங் என்று அழைக்கப்படும் சங்கர். குறிப்பாக அதிசியபிறவி படத்தில் ரஜினி முன் இவர் நடனமாடும் காட்சி மிகவும் பிரபலமானது. தமிழைத் தாண்டி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மற்ற இந்தி மொழிகளிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.   

Advertisment

இந்த நிலையில் கிங்காங் தனது மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் ஏற்பாடு செய்தார். இதற்காக திரை பிரபலங்களில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி தொடங்கி பல்வேறு பிரபலங்களுக்கும் அரசியலில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கினார். பின்பு கீர்த்தனா - நவீன் திருமணம் நேற்று(10.07.2025) பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள அறுபடை முருகன் கோயிலில் நடைபெற்றது. 

திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விடைபெற்றார். மேலும் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திரைபிரலங்களில் நாசர், விஷால், ரோபோ சங்கர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்தினர். 

இந்த சூழலில் முதல்வர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தது குறித்து தற்போது கிங்காங் வீடியோ மூலம் பேசி நன்றி தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு வந்திருந்தார். அவருக்கு எங்க குடும்பம் சார்பா நன்றியைச் சொல்லிக்குறேன். அவர் உயரத்தை பார்க்கல. அவ்ளோ டயர்டிலும் வந்திருந்தார். இதை எங்க குடும்பம் என்னைக்குமே மறக்கமாட்டோம்” என்றார்.