Skip to main content

நடராஜனுக்கு இருக்கும் அதே கனவுதான் எனக்கும்... நடிகர் ஜீவா கலகல பேட்டி!

 

jeeva

 

நடிகர் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'களத்தில் சந்திப்போம்'. பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸின் 90-ஆவது படைப்பாக உருவாகியுள்ள இப்படம், பிப்ரவரி 5-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நக்கீரன் ஸ்டூடியோ சார்பில், நடிகர் ஜீவாவோடு உரையாடினோம். அவர் நமக்கு அளித்த பேட்டி பின்வருமாறு...

 

களத்தில் சந்திப்போம் எந்த வகையான படம்?
 

ஒருவர் திருமணம் வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பார். மற்றொருவர் திருமணம் வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார். இந்த இரு இளைஞர்களின் 'இளைஞர்' பருவம் முதல் அவர்களது திருமணம் வரையிலான வாழ்க்கையைப் பேசும் படமாக இருக்கும். அதில், லவ், எமோஷன்ஸ் எல்லாம் இருக்கும்.

 

படம் நீங்கள் பார்த்துவிட்டீர்களா? படம் எப்படி வந்துள்ளது?
 

நான் படம் பார்த்துவிட்டேன். ரொம்ப நன்றாக வந்துள்ளது. எங்கள் நிறுவனத்தயாரிப்பு என்பதால் பட வேலைகள் முடிந்த உடனேயே பார்த்துவிட்டேன். ஏதாவது குறை இருந்தால் மாற்றிக்கொள்ளலாம், நம்மை நம்பி இன்னொரு ஹீரோ நடிக்கிறார். அவருக்கும் சம அளவிலான இடம் இருக்க வேண்டும்... இந்த விஷயங்களில் எல்லாம் கவனமாக இருந்தோம். எங்கள் நிறுவனத்தில் நாங்கள் மட்டும் நடிக்கவில்லை. பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர். தமிழில் ஆர்யா, தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் புனித் ராஜ்குமார், மலையாளத்தில் பகத் பாசில் எனப் பலரும் நடித்து வருகின்றனர்.

 

மஞ்சிமா, பிரியா பவானி சங்கர், ஜீவா... புது காம்பினேஷனா இருக்கே?
 

கதையைச் சொல்லும் போதே அவர்கள் இருவருக்கும் பிடிச்சுப்போச்சு. மஞ்சிமா செட்ல சிரிச்சுகிட்டே இருப்பாங்க. காமெடி படம் பண்ணும் போது தமிழ் தெரிஞ்ச நடிகர்கள் கூட நடிக்கிறது ரொம்ப முக்கியம். நாம ஒரு காமெடி சொல்லி அங்க யாருமே சிரிக்கலானா, நம்ம சொன்ன காமெடி மேல நமக்கே சந்தேகம் வந்திரும். அந்த வகையில, ரொம்ப ஜாலியா இருந்தது. சூட்டிங் முடிஞ்சதும் வீட்டுல இருந்து எல்லாரும் வந்துருவாங்க. ஃபேமிலியா உட்காந்து எல்லாரும் பாட்டு பாடி, சிரிச்சு விளையாடிக்கிட்டு இருப்போம்.

 

உங்களுக்குத் திருப்புமுனையா அமைந்த 'ராம்', 'கற்றது தமிழ்', 'சிவா மனசுல சக்தி' இந்த மூன்று படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். அதை எப்படிப் பார்க்குறீங்க?
 

என் சினிமா கேரியர்ல இந்தப் படமும் ரொம்ப முக்கியமான படமாக அமையும். வசூல் ரீதியாகவும் முக்கியமான படமா இருக்கும். யுவன், கதைக்கு ஏற்ற மாதிரி இசையமைக்கக்கூடிய இசையமைப்பாளர். அந்த மூன்று படங்களிலும் அவரோட மியூசிக் மூலமா என்னுடைய கேரக்டர அழகா காட்டியிருப்பார்.

 

படத்தில் கபடி பின்புலம் உள்ளது. 'மாஸ்டர்' படத்திலும் 'கில்லி' படத்திலிருந்த கபடி காட்சிகளை மறுவுருவாக்கம் செய்தது போல சில காட்சிகள் இருந்தது. அதைப் பார்க்கும் போது எப்படி இருந்தது?
 

'மாஸ்டர்' படம் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 'கில்லி' படம் வெளியானபோது, நான் யூத். தெலுங்கில் அந்தப் படம் வெளியானபோதே தமிழில் யார் நடித்தால் நல்லா இருக்கும்னு நாங்க யோசிச்சுகிட்டு இருந்தோம். எங்க கம்பெனி பண்ணியிருக்க வேண்டிய படம் அது. அதுக்குள்ளே வேறொருத்தவங்க பண்ணிட்டாங்க. மாஸ்டர் படத்துல அந்தக் காட்சி வந்தது சந்தோசம்தான். எங்க படம் வெளியாகும்போது அதுனால சில ஒற்றுமைகள் இருக்கும்.

 

சென்னை வட்டார வழக்கு பொருந்துகிற வெகுசில நடிகர்களில் நீங்களும் ஒருவர். அது எப்படி?
 

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். மேற்கு மாம்பலத்தில் இருந்தாலும் சரி, பொழிச்சனூரில் இருந்தாலும் சரி, இங்க இருக்கிற எல்லாருக்கும் அது பொருந்தும். மதுரை, கோயம்புத்தூர் மாதிரியான ஊர்களுக்கு எப்படி ஒரு ஸ்டைல் இருக்கோ அது போல சென்னைக்கும் ஒரு ஸ்டைல் இருக்குல. நாமே இங்கயே பிறந்து வளரப்போய் அது இயல்பாக அமைஞ்சிருச்சு.

 

'ராம்', 'கற்றது தமிழ்' என ஆரம்பகாலங்களில் கதையைத் தேர்ந்தெடுத்து நடித்த நீங்கள், தற்போது கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதற்கான காரணம்?
 

cnc

 

அப்படியெல்லாம் இல்லை. 'ஜிப்ஸி' கமெர்ஷியல் படமல்ல. அதற்கான கதை, இயக்குநர்கள் தொடர்ந்து அமையவேண்டும். 'ராம்' வெளியான போது அது புது முயற்சியா தெரிந்தது. 'சிவா மனசுல சக்தி' வெளியான பிறகு அது மாதிரியான படங்கள் தொடர்ந்து வர ஆரம்பித்தது. அந்தப் படங்கள் பத்தி இன்னைக்கும் பேசுறது ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்ப பண்ணுகிற படங்கள் 10 வருஷம் கழிச்சு பேசப்படும்னு நினைக்கிறேன்.

 

'83' படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?
 

ஸ்ரீகாந்த் அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததைப் பெருமையாக உணர்கிறேன். தெருவில் கிரிக்கெட் விளையாடிய நான், கையில் பேட்டை எடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது வியப்பாக இருந்தது. அந்த மைதானத்தில் ஒரு பந்தாவது வீசிவிட வேண்டும், ஒரு முறையாவது பேட் செய்துவிட வேண்டும் என்பதே இன்றைக்கு உள்ள அத்தனை கிரிக்கெட் வீரர்களின் ஆசையாக இருக்கும். நடராஜனுக்கு அதே கனவுதான் இருக்கும். அக்கனவு எனக்கு நிறைவேறிவிட்டது. அது கூடுதல் சந்தோசம்தான்.