
தமிழ் திரையுலகில் 1970களில் சிறிய கதாபாத்திரங்கள் மூலம் அறிமுகமான நடிகர் கவுண்டமணி, அடுத்தடுத்த படங்களில் டைமிங் காமெடியாலும், கவுண்டர்களாலும் பலரையும் சிரிக்க வைத்தார். அதுவும் கவுண்டமணி செந்திலுடன் நடித்த காட்சிகள் எல்லாம் இன்று வரை தமிழ் சினிமா காமெடியின் உச்சம் என்றே பார்க்கப்படுகிறது. இருவரும் இணைந்தாலே படத்திற்கு மினிமம் கேரண்டி என்று திரையரங்கில் மக்கள் திரண்டனர். படம் வெற்றிபெறுகிறதோ இல்லையோ படத்தின் காமெடிகள் பலராலும் பேசப்படும்.
அதேசமயம் கவுண்டமணி சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்திருக்கிறார். கவுண்டமணி தன்னுடைய காமெடி மூலம் போகிற போக்கில் அரசியல்வாதி, பணக்காரர்கள், ஊழல்வாதிகள் என பலரும் பேச தயங்கும் விஷயத்தை கூட தனக்கே உரித்தான பாணில் கிண்டல் செய்வார். இப்படி 80 - 90 காலகட்டங்கள் தமிழ் சினிமாவில் காமெடிகளில் கொடிக் கட்டிபறந்த கவுண்டமணி வயது மூப்பின் காரணமாக தமிழ்சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்து வருகிறார்.
இதனிடையே கவுண்டமணி கடந்த 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று காலை உயிரிழந்தார். தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. கவுண்டமணியின் மனைவி உயிரிழ்ந்ததற்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.