இயக்குனர், நடிகர் இ.ராமதாஸ் தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக கதை, திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியவர். மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, சுரேஷ் கிருஷ்ணா உள்பட பல இயக்குனர்களுடன் கதை, திரைக்கதை, வசன பணிகளில் ஈடுபட்டவர். தற்போது பல படங்களில் போலீசாக நடித்து வரவேற்பை பெற்றவர்.

Advertisment

இவர் சேரனுடன் நெருங்கிய நட்பில் இருப்பவர். 'மகாநதி' படத்தில் சேரன் தயாரிப்புப் பணியில் உதவியாளராக இருந்தபொழுது ஏற்பட்ட பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. சேரனை தனது தம்பியென்று அன்போடு அழைக்கும் இ.ராமதாஸ் சேரனின் படைப்புகள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது தனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை என்று சொல்லும் இவர், "இருந்தாலும் கலந்துகொள்வது அவரது உரிமை. தனிப்பட்ட தேவையையும் பொறுத்தது" என்கிறார்.

Advertisment

cheran - saravanan

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியில் சேரனுடன் நடிகர் சரவணனும் கலந்துகொண்டுள்ளார். சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில் சரவணன் சேரனை ஒருமையில் அழைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சேரன், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். சரவணன், கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் சில படங்களில் நடித்துள்ளார். "நான் ஹீரோவா பீக்ல இருந்தப்போ சேரன் அசிஸ்டன்ட் டைரக்டர்" என்றும் குறிப்பிட்டார் சரவணன். இந்தக் கருத்துக்கும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.

சரவணன், பிக்பாஸ் வீட்டுக்குள் இன்னொரு உரையாடலில் வேறு சிலரிடம், தான் ஹீரோவாக இருந்து, பின்னர் தோல்வியடைந்து மோசமான சூழ்நிலையில் இருந்தபோது சேரன் நல்ல நிலையில் இருந்ததாகவும் அப்போது அவரிடம் தான் வாய்ப்பு கேட்டதாகவும் அதற்கு சேரன் சரியான முறையில் பதிலளிக்கவில்லை எனவும் பகிர்ந்துள்ளார்.

Advertisment

சேரன், சரவணன் இருவர் குறித்தும் அறிந்த இ.ராமதாஸிடம் இதுகுறித்துக் கேட்டோம். "சரவணன், ஒரு ஹீரோவா இருந்தவர். பல இயக்குனர்களை டீல் செய்தவர். அவருக்கும் சினிமா பழக்கவழக்கங்கள் தெரியும். சேரனுக்கும் சரவணனுக்கும் முன்பே எந்த பிரச்சனையும் இல்லை. இங்கே உள்ள சூழ்நிலையில் ஏதாவது நடந்திருக்கும்" என்று கூறினார். மேலும், "பிக்பாஸில் இருக்கும் ஒவ்வொருவரின் செயல்பாடுகள், குணம் எல்லாம் உண்மையென்று சொல்ல முடியாது. எப்போதும் பதினைந்து வேற்று மனிதர்கள் கூட இருக்கும்போது எப்படி உண்மையான குணத்தை காட்டுவார்கள்? வெளியே வந்ததும் சேரன் வேறு, லாஸ்லியா வேறு, கவின், தர்ஷன் வேறுன்னு அவுங்க அவுங்க வாழ்க்கையை பார்க்க போய்டுவாங்க" என்று கூறினார்.