இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்த இப்படம், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், நடிகர் தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்யப்பட்ட படம் என்ற சாதனையையும் படைத்தது.
இந்த நிலையில், கோவாவில் நடைபெறவுள்ள இந்தாண்டிற்கான இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு, 'அசுரன்' படம் தேர்வாகியுள்ளது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இவ்விழாவானது, இந்தாண்டு கோவாவில் நவம்பர் 20 முதல் 28 -ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழல் நிலவியதால் ஒத்தி வைக்கப்பட்ட இவ்விழா, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 16 முதல் 24 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இது, இப்படம் உருவாக்குதலில் பங்கெடுத்த அனைவருக்கும் கிடைத்த மரியாதை. மக்கள் படத்தை தேர்வு செய்ததற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.