
'சிம்ஹா' மற்றும் 'லெஜண்ட்' ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பின் மூன்றாவது முறையாக போயபடி ஸ்ரீனு இயக்கத்தில், தற்போது பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். ஆர்யாவின் மனைவி சாயிஷா சைகல் ஹீரோயினாக நடிக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற, தெலுங்கு திரைப்படம் ஒன்றின் போஸ்டர் வெளியீட்டு விழாவில், நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டு பேசுகையில், "கரோனா என்பது நிமோனியாவைப் போல, மனித உடலிலேயே பரிணாம வளர்ச்சி அடைகிறது. அதனால் தான் இவ்வளவு மாதங்கள் கழித்தும் கூட தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. ஏன் தடுப்பூசி வராமலே கூடப் போகலாம். இது மனிதர்களின் மனதையும் குழப்பும் ஒரு கிருமி.
இந்தப் பனிக்காலத்தில் குளிர்ந்த நீரில் குளித்தால், நல்லது நடக்கும் என்று ஆன்மிகவாதிகள் சொல்லலாம். அவர்கள் பேச்சையே கேட்காதீர்கள். வெந்நீரில் நீராடுங்கள், ஒரு நாளை இரண்டு முறை உப்புத் தண்ணீர் கொப்பளியுங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் மந்திரங்களின் சக்தியை நம்புகிறேன். கடவுளை நம்புகிறேன். இந்த உலகில் யாரும் இயற்கையை விட, பெரிய நபர் கிடையாது. இயற்கையை அவமதித்தால் என்ன ஆகும் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இந்த நோய்த் தொற்று" என்று குறிப்பிடுள்ளார்.