Skip to main content

பிரச்சாரத்தின்போது தொண்டரை அறைந்த நடிகர்... வைரலாகும் வீடியோ!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

 balakrishna

 

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் பாலகிருஷ்ணா, இந்துபூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வான இவர்,  மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் மகன் ஆவார்.

 

இவர், எதிர்வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இந்துபூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். பிரச்சாரத்தின்போது கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்குச் சென்றார். அங்கே திரண்டிருந்த தொண்டர்களில் ஒருவர், அவரை மொபைல் ஃபோனில் படமெடுக்க முயன்றார். அப்போது திடீரென ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணா, அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும், எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அழிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதனால் அங்கே திரண்டிருந்தவர்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் இந்தச் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.

 

தன்னுடைய நிதானத்தை இழந்து இத்தகைய செயல்களில் பாலகிருஷ்ணா ஈடுபடுவது இது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கும்பகோணத்தில் சாமி தரிசனம் செய்த பாலகிருஷ்ணா

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

balakrishna Sami dharisanam at kumbakonam

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா, கடைசியாக 'பகவந்த் கேசரி' படத்தில் நடித்திருந்தார். கடந்த 19ஆம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து தனது 109வது படமாக இயக்குநர் கேஎஸ் ரவிந்திர என்கிற பாபியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 

 

இந்த நிலையில் தமிழ்நாடு வந்துள்ள பாலகிருஷ்ணா, கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

மீசையை முறுக்கித் தொடையைத் தட்டிய பாலையா; சட்டசபையில் பரபரப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

balakrishna condemn for chandrababu naidu arrest in assembly

 

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2014 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ. 300 கோடிக்கு மேல் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சந்திரபாபு நாயுடு கைதைத் தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

 

இந்த நிலையில் ஆந்திர சட்டப்பேரவை மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடியது. கேள்வி நேரம் நடைபெற்ற போது சபாநாயகர் இருக்கையை நோக்கிச் சென்ற தெலுங்கு தேச கட்சியினர் சபாநாயகரைச் சூழ்ந்து கொண்டு சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

 

அப்போது நடிகரும் அக்கட்சியின் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணா மீசையை முறுக்கித் தொடையைத் தட்டி தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். உடனே சபையில் இருந்த அமைச்சர் ராம்பாபு, "சினிமாவில் வேண்டுமானால் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கட்டும். இங்கே வேண்டாம்" எனக் குரல் எழுப்பினார். பின்பு அங்கே இரு தரப்பும் கூச்சலிட்டதால், நீண்ட நேரம் பெரும் அமளி ஏற்பட்டது. இதனால் சட்டசபையே பரபரப்பாகக் காணப்பட்டது.