
தமிழில் அன்பு, காதல் கிசு கிசு உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளவர் பாலா. அஜித் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் அனூப் இயக்கத்தில் 'ஷபீக்கிண்டே சந்தோஷம்' படத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மம்மூட்டி உட்பட பல நடிகர்கள் பாலாவின் நடிப்பைப் பாராட்டி இருந்தனர்.
இந்தப் படத்தைத் தயாரித்த நடிகர் உண்ணி முகுந்தன், பாலாவுக்கு சம்பளம் எதுவும் தராமல் இழுத்தடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை பாலா வெளியில் சொன்ன பின்னர், பாலா ரசிகர்களுக்கும் உண்ணி முகுந்தன் ரசிகர்களுக்கும் கருத்து மோதலில் தொடங்கி கை கலப்பு வரைச் சென்றது. உண்ணி முகுந்தனின் செய்தியாளர் சந்திப்பில் பாலாவின் சம்பளப் பிரச்சனை பற்றி ரசிகர்கள் கேள்வி கேட்க, பெரும் பிரச்சனையாக ஆனது.
இது தொடர்பாக பாலா கூறுகையில், "உண்மை எப்போதும் உறங்காது. எனக்காகக் குரல் கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார். விரைவில் நடிகர் பாலா திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இது தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிறது. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.