Skip to main content

“இதுவரை 125 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன” - அடுத்த ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

actor bala helped his 4th ambulance

 

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் பாலா. அவர் சம்பாதித்த நிதியில் தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் 4வது ஆம்புலன்ஸை உணர்வுகள் அறக்கட்டளையிடம் வழங்கினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இது என்னுடைய 4வது ஆம்புலன்ஸ். அறந்தாங்கி, குன்றி, சோலைகனை கிராமத்தை தொடர்ந்து இந்த அம்புலன்ஸ் சாலையோரம் இருக்கும் மக்களுக்கு கொடுத்துள்ளோம். சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதியில் இருக்கும் சாலையோர மக்களை ஒடுக்கப்பட்ட மக்கள் என்று சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு தாய் மக்கள். ஒரு மனிதன் பிறக்கும் பொழுது சந்தோஷமாக பிறக்க வேண்டும். ஆனால் இறந்து போகும்போது நிம்மதியாக போக வேண்டும். அவர்களுக்கு எந்த விதமான தொல்லையும் இருக்கக் கூடாது என நினைத்தேன். 

 

நிறைய பேர் என்னிடம் கார் இல்லையே, நிகழ்ச்சிக்கு போக வேண்டுமானால் கூட நண்பர்கள் காரில் தான் போக வேண்டியுள்ளதாகச் சொன்னார்கள். அந்த மாதிரி காரை வாங்கிவிட்டு சாலையோரம் போறதுக்கு, சாலையோரம் இருக்கும் மக்கள் இந்த ஆம்புலன்சில் போனார்கள் என்றால் ஃப்ரண்ட்ஸ் காரில் போவது போல் இல்லை பென்ஸ் காரில் போவது போல் இருக்கும் என்று சொன்னேன். ஒடுக்கப்பட்ட மக்கள் என சொல்லப்படுபவர்களைத் தொடுவது அவமானம் என்கிறார்கள். அவங்களுக்கு உதவி செய்வது அவமானம் கிடையாது. மனிதாபிமானம். இந்த மாதிரி ரொம்ப கருத்தாக எனக்கு பேச தெரியாது. இருந்தாலும் எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன். எல்லாருமே ஒரு தாய் மக்கள், எல்லாருமே தமிழ்நாட்டு மக்கள். 125 நாளில் 4 ஆம்புலன்ஸ் கொடுத்திருக்கிறேன். என்னுடைய சக்திக்கு மீறின ஒரு விஷயம். இதுக்கப்புறமும் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். 

 

அடுத்ததாக 5வது ஆம்புலன்ஸ் பாலமலை கிராமத்திற்கு கொடுக்கவுள்ளேன். மொத்தம் 10 ஆம்புலன்ஸ் கொடுக்கப் போராடுகிறேன். யாருடைய ஃபண்டிலும் நான் பண்ணவில்லை. என்கிட்ட இருக்கிறதை வைத்து இந்த தொண்டு பண்ணுகிறேன். முதல் ஆம்புலன்ஸ் அப்பகுதியில் நல்ல படியாக போகிறது. இரண்டாவது ஆம்புலன்ஸ் குன்றியில் இதுவரை 125 பேர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. அந்த ஆம்புலன்சில் போன யாருமே இறக்கவில்லை. எல்லாருமே உயிர் பிழைச்சிருக்காங்க என்று நினைக்கும் போது அதைவிட ஒரு பெரிய விஷயம் இல்லை. அதில் மொத்தம் 20 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். மூன்றாவது ஆம்புலன்சினால் 26 பேர் பயனடைந்துள்ளார்கள். இதை விட ஒரு மெடல் கிடைக்குமா சந்தோசம் கிடைக்குமா என தெரியவில்லை. இதற்கு உதவி பண்ணுவதாக நிறைய பேர் கேட்டாங்க. இயக்குநர் விக்னேஷ் சிவனும் கேட்டார். அவர் செய்ய விரும்பினால் நேரடியாக செய்ய சொன்னோம்" என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்