Skip to main content

"இதுவரை நான் கண்டிராத மன உளைச்சலாக இது இருந்தது..." சென்னை போலீசாருக்கு நன்றி தெரிவித்த ஆர்யா!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

arya

 

இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், நடிகர் ஆர்யா தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடம் ரூ. 70 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, தன்னை ஏமாற்றிவிட்டார் என்று நடிகர் ஆர்யா மீது புகார் தெரிவித்திருந்தார். ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்துவரும் விட்ஜா, ஆர்யா மீது பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் அளித்துள்ள புகாரில், பணத்திற்கு கஷ்டப்படுவதாகக் கூறிய ஆர்யா, தன்னை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாகத் தெரிவித்திருந்தார். பிரபல நடிகரான ஆர்யா மீது, பெண் ஒருவர் ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்தது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் ஆர்யாவும் அண்மையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். 

 

இது தொடர்பாக சென்னை சைபர் பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், முகமது அர்மான் என்பவர் ஆர்யாவைப் போல நடித்து அப்பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டதும், அவருக்கு உடந்தையாக ஹூசைனி பையாக் என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இந்த இருவரும் நேற்று (24.08.2021) கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இந்த விவாகரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு நடிகர் ஆர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ததற்காக சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் மற்றும் சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதுவரை நான் கண்டிராத மன உளைச்சலாக இது இருந்தது. என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்