நடிகை திவ்யா விவகாரத்தில் அர்னவ் கைது

actor Arnav arrested in serial actress Divya case

சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான நடிகை திவ்யா ஸ்ரீதர் கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து திவ்யா "தான் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் கணவர் அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், கணவர் அடித்ததில் எப்போது வேண்டுமானாலும் கரு கலையும் அபாயம் இருப்பதாகவும்" ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் ஒரு வீடியோ வெளியிட்டு அர்னவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். பின்பு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனையடுத்து அர்னவ், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பின்பு செய்தியாளர்களிடம், "தான் திவ்யாவை அடித்து துன்புறுத்தவில்லை, அதற்கான சிசிடிவி காட்சிகள் ஆதாரமாக இருக்கிறது. தன்னுடைய குழந்தையை கருக்கலைப்பு செய்யும் எண்ணத்துடன் திவ்யா செயல்படுகிறார்" என கூறியிருந்தார். பின்பு சென்னை பெருநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் அர்னவ் மீது திவ்யா புகார் கொடுத்திருந்தார். மேலும் "அர்னவ், அவருடன் சீரியலில் நடித்து வரும் அன்ஷித்தா என்ற நடிகையுடன் நெருங்கி பழகி வருகிறார். இதற்கு எல்லாம் அந்த நடிகை தான் காரணம்" என குற்றம் சாட்டியிருந்தார். இதனை தொடர்ந்து இருவரும் தங்கள் தரப்பு நியாயங்களை முன்வைத்து பேட்டி கொடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து நடிகை திவ்யா அளித்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் காவல்துறை அர்ணவ் மீது 3 வழக்குகள் பதிவு செய்து இன்று (14.10.2022) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பினர். இந்நிலையில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகாத அர்னவவை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படபடப்பிடிப்பு ஒன்றில் இருந்த அர்னவவை மாங்காடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

actor serial actress
இதையும் படியுங்கள்
Subscribe