நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், கடந்த 27ஆம் தேதி கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவரைக்காண ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் மற்றும் பொது மக்களும் கூடினர். கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்து அது பெரிய துயர சம்பவமாக மாறியுள்ளது. மூச்சுத்திணறியும் மயக்கமடைந்தும் இதுவரை 41 உயிரிழப்புகள் நடந்துள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தலைவர்கள் முதல் அனைத்து கட்சி தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதலும் கூறியும் பின்பு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தும் வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நிவாரண நிதி, வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே திரைபிரபலங்கள் பலரும் இந்த துயரச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, நெஞ்சை உலுக்கியதாக எக்ஸ் பக்கம் வாயிலாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும் கமல், மோகன்லால், மம்மூட்டி, ஜி.வி.பிரகாஷ், வடிவேலு, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், ராஜ் கிரண், கார்த்தி, ரவி மோகன், டி.ராஜேந்தர், யுவன் ஷங்கர் ராஜா, லதா ரஜினிகாந்த் ஆகியோர் தங்களது சமூக வலைதளப்பக்கம் வாயிலாக உயிரிழந்த குடும்பத்தாருக்கும் இரங்கலும் சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தாருக்கும் அறுதலும் தெரிவித்தனர்.
இதனிடையே நடிகை ஓவியா விஜய்யை கைது செய்ய வேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு பின்பு நீக்கிவிட்டார். இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல், நடிகை கயாடு லோஹர், தவெகவின் சுயநல அரசியலுக்காக கரூர் கூட்டத்தில் நான் மிகவும் நெருங்கிய நண்பரை இழந்துவிட்டதாகௌம் விஜய்யின் பேராசைக்காக இன்னும் எத்தனை உயிர்கள் பலியாக இருக்கிறதோ என்றும் பதிவிட்டது போல் ஒரு எக்ஸ் பதிவ் வைரலானது. ஆனால் அது போலி என்று அவர் பின்பு விளக்கமளித்தார். இதனிடையே விஷால், முழுக்க முழுக்க முட்டாள்தனம் என விமர்சித்து இனிமேல் இது போன்ற அரசியல் நிகழ்வுகளுக்கு பாதிகாப்பை பலப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.