Skip to main content

"தம்பி தவறவிட்ட 'நெஞ்சுக்கு நீதி' யை கைப்பற்றிய உதயநிதி" - ரகசியத்தைப் பகிர்ந்த ஆரி !

Published on 21/05/2022 | Edited on 21/05/2022

 

actor aari talk about nenjukku needhi movie

 

அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த  வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். நேற்று (20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஆரி கூறுகையில், "நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். சமூக நீதியை சரிசமமாக சொல்லும் படம் இது. ஒன்றை உயர்த்தி மற்றொன்றை தாழ்த்தி எடுக்கப்பட்ட படம் அல்ல. முக்கியமாக சாதி அரசியல் படம் அல்ல. நிறைய பேர் இந்த படத்தின் கதையை கேட்டு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக அதர்வா, அருள்நிதி உள்ளிட்ட நடிகர்களுக்கு  நன்றி. ஒரு வேலை அவர்கள் நடித்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.

மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னாடி சாதி இருக்கு. ஆனா இங்க பெயருக்கு பின்னாடி சாதி இல்லை.  அப்படி இருக்கையில் நீங்க ஏன் இப்படி சாதியை தூண்டுகிற வகையில் படம் எடுக்கிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். நாம் பெயரில் மட்டுமே சாதியை ஒழித்து விட்டோம் , ஆனால் நம் மனதில் சாதி அப்படியே தான் இருக்கிறது. சாதியை வெளியில் சொல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் சமூக நீதி பற்றிய புரிதலோடு இருப்பது ரொம்ப முக்கியம். நாம எந்த சாதியில் பிறந்தோம் என்பது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த சாதி பெருமையோடு மற்றவர்களை இழிவாக பாக்கிறதுதான் இங்க பிரச்சனை.  அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்த படம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் தம்பி அருள் நீதி தவறவிட்ட இந்த படத்தை அவரின் அண்ணன் நடித்து 'நெஞ்சுக்கு நீதி'யில் இருக்கும் சமூக நிதியை மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு!

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Case registered against Minister Udayanidhi Stalin

சென்னையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் என்ற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். இந்த மாநாட்டை பார்க்கின்ற போது சிலருக்கு எரிச்சல் இருக்கும். அவர்களுக்கு முடிந்த வரை எரியட்டும். எல்லா சமூக மக்களையும் ஒரே இடத்தில் குடி வைத்து அந்த இடத்திற்கு சமத்துவபுரம் என்று பெயர் வைத்து சனாதனத்திற்கு சம்மட்டி அடி கொடுத்தவர்தான் கலைஞர்.

டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” என்றார். இவரது பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு மீதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு கடந்த 6 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதற்காக அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி நீதிபதி அனிதா சுமந்த் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், “நமது சமூகத்தில் உள்ள சாதிய அமைப்பு, கடந்த நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது. அப்படியிருக்க, சாதிய கொடுமைகளுக்கு வர்ணாசிரமம் தான் காரணம் என பழி கூற முடியுமா? வர்ணாசிரமம் பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை; செய்யும் தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டது. சனாதனம் என்பது அழிவற்ற நிலையான, ஒழுக்க நெறிகளை குறிக்கிறது. ஆனால் சனாதனம் பற்றி நீங்கள் பேசிய கருத்து முற்றிலும் தவறு” என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் சனாதன தர்மம் குறித்துப் பேசியது தொடர்பாக மத உணர்வுகளை உதயநிதி ஸ்டாலின் புண்படுத்திவிட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பீகாரின் ஹர்ரா நகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.