Skip to main content

2023 ஆஸ்கர் விழா; இரண்டாவது முறையாக உக்ரைன் அதிபரின் கோரிக்கை நிராகரிப்பு

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

Academy rejects Ukrainian President Volodymyr Zelenskyy request

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான 95வது ஆஸ்கர் விழா நாளை (12.03.2023) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 8 மணி முதல் ஆரம்பிக்கவுள்ளது. இந்திய நேரப்படி 13 ஆம் தேதி காலை ஒளிபரப்பாகும். 

 

இந்த விழாவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடல் பிரிவில் போட்டியிடுகிறது. இந்தியாவில் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படப் பிரிவிலும் போட்டியிடுகிறது. இந்த நிகழ்வின் தொகுப்பாளர் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனேவும் இடம்பெற்றுள்ளார். மேலும் ஆஸ்கர் அமைப்பின் உறுப்பினராக இருக்கும் சூர்யாவும் தனது வாக்கினை அண்மையில் செலுத்தினார். 

 

இந்த விழாவில் கலாச்சாரம் குறித்து துவக்க உரை நிகழ்த்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில் அதனை தற்போது ஆஸ்கர் அமைப்பு நிராகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக செலன்ஸ்கி கோரிக்கையை ஆஸ்கர் நிராகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பாக, பல விருது நிகழ்ச்சிகளில் போர் குறித்து பேசியிருந்தார். கடந்த வருடம் ஏப்ரலில் நடந்த 64வது கிராமி விருது விழாவிலும் கலந்து கொண்டு பேசினார்.  வோலோடிமிர் செலன்ஸ்கி, தொலைக்காட்சி நகைச்சுவை போட்டிகளில் பங்கேற்று பின்பு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

 

சார்ந்த செய்திகள்