பிரபல பாலிவுட் தம்பதிகளான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இருவரும் தங்களது கரியரான சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். அபிஷேக் பச்சன் ‘காளிதர் லாபாதா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதையடுத்து தற்போது ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராயை பொறுத்தவரை கடைசியாக ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.
சமீப காலமாக அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருந்து வருவதாக ஒரு தகவல் உலா வந்தது. அதற்கேற்றவாறும் சில நிகழ்வுகள் நடந்தது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம், அதன் பிறகு நடந்த ஒரு சினிமா விருது நிகழ்வு என அனைத்திலும் ஐஸ்வர்யா ராய் தனியாகவே கலந்து கொண்டிருந்தார். இதையடுத்து அப்படி ஒன்றுமில்லை என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் அபிஷேக் பச்சன் சமீபத்திய நேர்காணலில் குழந்தை வளர்ப்பது, குடும்பத்தின் முக்கியத்துவம் மற்றும் ஐஸ்வர்யா ராய் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் எல்லா பாராட்டுகளையும் ஐஸ்வர்யா ராயிக்கு கொடுக்க வேண்டும். எனக்கு நான் படம் பண்ண சுதந்திரம் கொடுக்கிறார். ஆனால் ஆராத்யாவை ஐஸ்வர்யா தான் பார்த்துக் கொள்கிறார். அவர் அற்புதமானவர் மற்றும் தன்னலமற்றவர். தாய்மார்கள் வித்தியாசமானவர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக தந்தைமார்கள் தங்களது இலக்கை நோக்கி தான் சிந்திப்பார்கள். ஆனால் தாய்மார்கள், தங்களின் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
ஆராத்யா எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை. அவரிடம் ஃபோனும் இல்லை. அவர் மிகவும் நல்லவிதமாக ஒரு அற்புதமான இளம் பெண்ணாக வளர்கிறார். எங்கள் குடும்பத்தின் சந்தோஷமும் பெருமையும் அவர். இதற்கு ஐஸ்வர்யா ராய் தான் காரணம்” என்றார்.