பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், தனது புகைப்படம் ஆன்லைனில் தவறாக பயன்படுத்துவதாக நீதிமன்றம் சென்றுள்ளார். அவர் சார்பாக வழக்கறிஞர்கள் அமீத் நாயக் மற்றும் பிரவீன் ஆனந்த் ஆகியோர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடுத்துள்ள மனுவில், அபிஷேக் பச்சனின் புகைப்படங்கள் அவருடைய அனுமதி இல்லாமல் வணிக நோக்கில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் ஏமாற்றப்படலாம். 

Advertisment

மேலும் அவரது புகைப்படங்களை ஏஐ-மூலம் உருவாக்கி பாலியல் தொடர்பான உள்ளடக்கங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும் மற்றும் அவரது தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டனர். இந்த மனு நீதிபதி தேஜாஸ் கரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அபிஷேக் பச்சன் வழக்கறிஞர்கள் சமர்பித்த குறிப்புகளை நீதிபதி பதிவு செய்து கொண்டார். பின்பு இது தொடர்பாக உத்தரவை பிறப்பிப்போம் என கூறினார். 

இதே போல் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படம் ஆன்லைனில் தவறாக பயன்படுத்துவதாக அதை தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உடனடி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.