aarti ravi new statement regards his marriage issue

ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 2009ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. கடைசியாக நடந்த விசாரணையில் ரவி மோகன் தரப்பில் எதற்காக விவாகரத்து கோருகிறேன் என்று விளக்கமளித்து ஒரு புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதே சமயம் ஆர்த்தி தரப்பில் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இருவரின் மனுக்களுக்கும் இரு தரப்பிலும் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கடைசியாக நடந்த விசாரணைக்கு முன்பு இம்மாத தொடக்கத்தில் ஒரு திருமண நிகழ்வில் ரவி மோகனும் அவரது விவாகரத்து முடிவிற்கு காரணமாக சொல்லப்பட்ட பாடகி கெனிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டிருந்தனர். இது தொடர்பாக ஆர்த்தி, ரவி மோகனை விமர்சித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். பதிலுக்கு ரவி மோகனும் ஆர்த்தி குடும்பத்தால் தான், வெறுங்காலுடன் வீட்டை விட்டு வெளியேறினேன் என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் இதுவே எனது முதல் மற்றும் கடைசி அறிக்கை எனக் கூறியிருந்தார். இதற்கு பிறகு ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார், ரவி மோகனின் குற்றச்சாட்டுகளை மறுத்து நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ஆர்த்தி மீண்டும், ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் எங்கள் பிரிவிற்கு மூன்றாவது நபரே காரணம் என்றும் ரவி மோகன் வெறுங்காலுடன் செல்லவில்லை, ரூ.5 கோடி மதிப்புள்ள காரில் தான் வீட்டை விட்டு சென்றார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பல கேள்விகளை கேட்டிருந்தார். இப்படி இரு தரப்பினரும் தங்கள் பக்க நியாயங்களை அறிக்கையாக மாறி மாறி வெளியிட்டு வந்தனர்.

Advertisment

இதையடுத்து ரவி மோகன், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவிக்க ஆர்த்தி மற்றும் அவரது தாயார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையின் போது ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் வதூறு கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் இனி அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அதன்படி ரவி மோகன் தனது சமுக வலைதளப்பக்கங்களில் அறிக்கையை நீக்கினார். ஆனால் ஆர்த்தி நீக்காமல் இருந்த நிலையில் அதை நீக்க சொல்லி ஆர்த்திக்கு ரவி மோகன் வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தார். மேலும் அவரது தாயாருக்கும் அனுப்பியிருந்தார். பின்பு ஆர்த்தி தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்ட அறிக்கைகளை நீக்கினார்.

இந்த நிலையில் ஆர்த்தி, ஊடகங்கள், மீடியா உள்ளிட்ட ஆன்லைன் பயனர்கள் யாராக இருந்தாலும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவின்படி, அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நடந்து வரும் திருமண விவகாரம் தொடர்பாக எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருந்தாலும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தொடர்ந்து அப்படி ஏதேனும் வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றுள்ளார். அதோடுநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

Advertisment