Advertisment

“ஜெயம் ரவியின் முடிவு குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்டது அல்ல” - ஆர்த்தி

aarthi ravi about jayam ravi divorce

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இதில் ஒரு குழந்தையான ஆரவ், ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி நேற்று முன் தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும் என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார். ஜெயம் ரவியின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. இதையடுத்து நேற்று ஜெயம் ரவி தரப்பில் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 2009ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

Advertisment

இந்த சூழலில் ஆர்த்தி, ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக நான் உணர்கிறேன். என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

jayam ravi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe