aari speech in Route No 17 Audio Launch

Advertisment

நேமி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிலாஷ் ஜி.தேவன் இயக்கத்தில் ஜித்தன் ரமேஷ், அஞ்சு பாண்டியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. இப்படத்தில் ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் டிச-29 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, பின்னணி பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், நடிகைகள் வசுந்தரா, ஜித்தன் ரமேஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற நடிகர்கள் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் நடிகர் ஆரி இருவரும் இந்தப் படத்தின் இசையை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.

நாயகன் ஜித்தன் ரமேஷ் பேசும்போது, “நானும் அபிலாஷும் எப்போதும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். அப்போது தாய் நிலம் என்கிற படத்தை எடுத்திருந்த அவர் உங்களுக்காக ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். ஆரம்பித்தது தெரிந்தது. ஆனால் முடித்தபோது ஒன்றுமே புரியவில்லை. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக கதை இருந்தது. 90% படம் காட்டில் தான் படமாக்கப்பட்டது அதிலும் நிறைய காட்சிகள் ஒரு குகையில் தான் எடுக்கப்பட்டன. அந்த குகைக்குள் கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் இருந்து நடித்தோம். மூச்சு விடவே சிரமப்பட்டோம். இந்த படத்தின் நாயகி அஞ்சு, தண்ணீரில் குளித்ததை விட சேற்றில் தான் அதிகம் குளித்து இருப்பார். கிட்டத்தட்ட 30 நாட்கள் இதேபோன்று தான் அவரது நிலை இருந்தது. இடையில் கால் உடைந்து ஓய்வு எடுக்க வேண்டியது கூட இருந்தது. ஆனாலும் தனது பணியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார்” என்று கூறினார்.

Advertisment

நடிகர் ஆரி பேசும்போது, “இந்த விழாவில் எல்லா பாடகர்களையும் அழைத்து கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் சினிமாவிற்கு வந்தே 50 வயது ஆகிவிட்டது. ஆனால் அவ்வளவு இளமையான இசையை கொடுத்திருக்கிறார். அவர் உடம்புக்குதான் வயதாகி இருக்கிறது. இசைக்கு வயதாகவில்லை. நெடுஞ்சாலை சமயத்தில் அபிலாஷ் என்னிடம் ஒரு முறை கதை சொல்ல வந்தார். அப்போது இருந்து நல்ல பழக்கம். பின்னர் சில வருடங்கள் கழித்து தபால் அலுவலகம் மூலமாக சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்கிற பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் முன்னெடுத்தபோது அங்கே எனக்கு உறுதுணையாக நின்று உதவிகளை செய்தவர் அபிலாஷ்.

ஜித்தன் ரமேஷுக்கு முன்னாடியே என்னிடம் இந்த கதையை அவர் சொல்லி இருக்கிறார். ஹீரோவாக நடித்து தோத்தவன் இருக்கிறான். ஆனால் வில்லனாக நடித்து தோத்தவன் யாரும் இல்லை. வில்லனாக காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த சினிமா உங்களை நிச்சயம் உயரத்துக்கு கொண்டு போய் வைக்கும். நானும் அடுத்த வருடம் வெளியாகும் ஒரு படத்தில் உங்களை போலவே ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன்” என்றார்.